zசிறப்புத் தொடர்: உங்களால் இதை நம்ப முடியாது!

Published On:

| By Balaji

நரேஷ்

சென்னைக்குச் செய்ய வேண்டியது என்ன? – 12

ஒரு சின்னக் கதை.

1990:

ஜப்பான் நாட்டில் கமிகட்ஸு (Kamikatsu) என்று ஓர் ஊர் உள்ளது. 1990களின் முற்பகுதியில் இன்றைய சென்னையைப் போலவே குப்பைகளால் நிறைந்திருந்த ஊர் அது. இப்போதைய சென்னையின் வளர்ச்சியை அப்போதே அவ்வூர் எட்டியிருந்ததால், குப்பைகளின் அளவுக்குக் குறைவில்லை. மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பாகுபாடில்லாமல் வீதிகள்தோறும் குப்பைகள். மக்களும் தங்கள் வீடுகளில் குப்பை சேராமல் இருந்தால் சரி என்று வீதிகளைக் குப்பைகளால் நிறைத்தார்கள்.

1996:

இன்று சென்னையில் நடந்துகொண்டிருக்கும் அழிவுதான் 1996க்குப் பிறகான ஏழு ஆண்டுகள் கமிகட்ஸுவில் நடந்தது. கிராமத்தில் இருந்த கால்நடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. காரணம், குப்பைகள். கிராமத்திலிருந்த குழந்தைகளைப் பெயர் தெரியாத நோய்கள் பிடித்தாட்டின. காரணம், குப்பைகள். குப்பைக் கழிவுகளை உண்டதால் கால்நடைகள் பாதிக்கப்பட்டன. குப்பைக் கழிவுகளால் உருவான சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள்.

2003:

கிராம மக்கள் ஒன்றுகூடி ஒரு முக்கிய முடிவை எடுத்தார்கள். பின்னாளில், ஒட்டுமொத்த உலகமும் வியந்து பாராட்டப்போகும் முடிவு அது என்று அன்று அவர்களுக்குத் தெரியாது. அந்த முடிவுதான் இன்று உலகத்திற்கான உயிர்ப் பாடம்.

“அது ஒன்றும் அவ்வளவு சிரமமான முடிவல்ல. தூக்கி எறியும் குப்பைகளைப் பிரித்துப் பயன்படுத்தி எறிய வேண்டும். அவ்வளவேதான். ஆனால், இந்தச் சின்ன மாற்றம்தான் எங்கள் அனைவரின் ஆரோக்கியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம். இதை 2020க்குள் சாத்தியப்படுத்த வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தோம். அதற்கு முன்னரே அதைச் சாத்தியப்படுத்திவிட்டோம். உலகத்திலேயே குப்பைகள் இல்லாத (Zero waste) நகரம் எங்களுடையதுதான்” என்று அந்த ஊரின் ஒவ்வொரு குடிமகனும் கர்வத்துடன் பேட்டியளிக்கிறார்கள்.

**இது எப்படிச் சாத்தியமானது?**

“குப்பைகளைப் பிரிப்பதெல்லாம் முதலில் வேண்டாத வேலையாகத்தான் தோன்றியது. இதற்காக அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. ஆனால், ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் இருந்த ஈடுபாடு என்னை மாற்றியது. இதன் அவசியத்தை உணர்ந்துகொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை கடையில் எந்தப் பொருள் வாங்கினாலும், அட்டைப் பெட்டிகளில்தான் வாங்குகிறேன். அந்தப் பெட்டிகளையே மக்கள் பொருள் வாங்க வரும்போது பேக் செய்துகொடுக்கப் பயன்படுத்துகிறேன். எனவே என் கடையில் குப்பைகளே உருவாவதில்லை” என்கிறார் தக்குயா (Takuya).

அவர்கள் செய்வதெல்லாம் குப்பைகளைப் பிரிப்பது மட்டுமே. மட்கும் குப்பைகளையும், மட்காத குப்பைகளையும் பிரித்து மறுசுழற்சி செய்ய முடிந்த பொருட்களை மறுபயன்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அவர்களே எதிர்பார்த்திராத அந்த அற்புதம் நடந்தது.

குப்பைகள் குறைக்கும் இந்த நடவடிக்கை, அம்மக்களின் பொருளாதாரத்தைப் பெருமளவு உயர்த்தியது. இந்த “Zero waste” நடவடிக்கை அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பட்டியலிடுகிறேன்.

உங்களால் நிச்சயம் அதை நம்ப முடியாது!

1) குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றைத் திரும்பப் பயன்படுத்துவதால், புதிய பொருட்களை வாங்குவதற்கான தேவை அவர்களுக்கு இல்லை. பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

2) சமையலறைக் கழிவுகளை ‘Compost’ தொழில்நுட்பம் மூலம் உரமாக மாற்றித் தங்கள் தோட்டங்களிலேயே பயன்படுத்துவதால் காய்கறிகள் வாங்குவதற்கென்று தனியாகச் செலவு செய்ய வேண்டியதில்லை. வெறும் மாடித்தோட்டத்திலிருந்தே மாதத்திற்கான சமையலறைத் தேவைகளைத் தீர்த்துக்கொள்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், சமையலறை சிதறல்களில் இருந்தே சமையலறைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

3) நிலம் இல்லாதவர்கள், காய்கறிகள் வளர்க்க வழியில்லாதவர்கள், தங்கள் சமையலறைக் கழிவுகளை விவசாயிகளுக்கு விற்று விடுவார்கள். இதைவிட சிறப்பான செயல் என்னவென்றால், இவர்கள் உரம் கொடுத்தால் உழவர்கள் உணவு கொடுப்பார்கள். அங்கே பணப் பரிமாற்றத்தைவிட பண்டப் பரிமாற்றமும் அன்புப் பரிமாற்றமும் அதிகம் இருந்தது. தங்களுக்குள்ளேயே தன்னிறைவாக வாழ்ந்தார்கள். பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

4) குப்பைகள் இல்லாததால் சுகாதாரம் மேம்பட்டது. நோய்கள் நொந்து ஓடின. ஆரோக்கியமான சுற்றுச்சூழல், இயற்கை உரத்தால் விளைந்த காய்கறிகளை உண்பது என்று அம்மக்களின் ஆரோக்கியமும் அருமையாக இருந்ததால், அவர்கள் மருத்துவத்துக்காக அதிகம் செய்யவில்லை. மருத்துவமனைக்குச் செலவு செய்யவேண்டியத் தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை. பொருளாதாரம் உடல்நலம் பாதுகாக்கப்பட்டது.

5) குப்பைகளைத் தவிர்க்கும்போதுதான் அவர்களுக்கு குப்பைகள் எங்கே உருவாகின்றன என்று தெரியவந்தது. விழாக்களில் இருந்து விருந்துகள் வரை தேவையற்ற குப்பைகளைக் குறைத்தார்கள். தேவையற்ற நுகர்வைக் குறைத்தார்கள். தேவையானவற்றைக் குப்பைகளிலிருந்தே மறுபயன்பாடு செய்துகொண்டார்கள். தற்சார்பாக வாழத் தொடங்கினார்கள். பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

6) மறுசுழற்சி செய்ய முடியாத, எதற்கும் உதவாத குப்பைகளை வைத்து கலை பொருட்கள் செய்தார்கள். தங்கள் வீடுகளையும் வீதிகளையும் அலங்கரித்தார்கள். கலை அவர்களின் மனங்களை இலகுவாக்கியது. இதனால் அம்மக்கள் தங்கள் பணிகளில் மிகவும் திறன் மிகுந்தவர்களாக மாறினார்கள். பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

7) அவ்வூரின் கலைநயத்தை கேள்விப்பட்டும், மக்களின் வாழிவியலை வியந்தும் சுற்றிப் பார்த்து வியந்து செல்வதற்காக விரைந்தனர் சுற்றுலாப் பயணிகள். ஊரின் ஒட்டுமொத்த பொருளாதாரம் மேம்பட்டது.

8) மறுசுழற்சி செய்யப்படும் குப்பைகளிலிருந்தும் ஒரு சிறு தொகை வந்தது. குப்பையிலிருந்து வருமானம் வந்தது. மிகச் சிறியளவுதான் என்றாலும், அதுவும் அவர்களின் பொருளாதாரத்தை பாதுகாத்தது.

9) குப்பைகள் இல்லாததால் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டது. நீரை பணம் கொடுத்து வாங்கிப்பயன்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. சூழலும் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டது.

10) மக்களே முன்வந்து பொருட்களைப் பிரித்துக் கொடுத்து பொறுப்புடன் நடந்துகொள்வதால், குப்பைகளுக்கென்று துப்புரவு பணியாளர்களின் தேவை அவர்களுக்கில்லை. குப்பைகளால் அடைபட்டு சாக்கடைகளாகும் இடங்கள் இல்லை. பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

11) மட்காத குப்பைகளை உண்டு கால்நடைகள் பாதிக்கப்படவில்லை. பிளாஸ்டிக் துகள்களை உட்கொண்டு பறவைகள் சாகவில்லை. பிளாஸ்டிக் பாட்டில்கள் கலந்து கடல் உயிர்கள் காவு வாங்கப்படவில்லை. உயிர்கள் உன்னதமாக வாழ்ந்தன. கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு என்று வளம் கொழித்தது. பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

12) இந்த மனமாற்றம், அம்மக்களின் நுகர்வைப் பெருமளவு குறைத்தது. குப்பைகள் குறைய வேண்டுமானால், குப்பைகளை உருவாக்கக் கூடாது எனும் எண்ணம் அவர்களுக்கு இயல்பாக எழுந்தது. பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

13) கடைகளில் பொருட்களின் விலை குறைந்தது. ஏனெனில் தேவையில்லாத பேக்கிங்குகள் தவிர்க்கப்பட்டன. பொருட்களுக்கு வாங்குவதற்குப் பாத்திரங்களும் துணிப்பைகளும் கொண்டுவரப்படுவதால் பெரும்பாலும் கடைக்காரர்கள் மொத்தமாகவே பொருட்களை வாங்கினார்கள். பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

இவை வெறும் எடுத்துக்காட்டுப் பட்டியல்தான். இன்னும் சொல்வதற்கு ஏராளமாக இருக்கின்றன. இன்னொரு மிகப்பெரிய ஆச்சரியமும் நடந்தது. அதுவும் அம்மக்கள் எதிர்பாராததுதான்!

(தீர்வை நோக்கிய தேடல் தொடரும்..!)

[பகுதி 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/06/36)

[பகுதி 2](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/07/28)

[பகுதி 3](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/09/34)

[பகுதி 4](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/11/19)

[பகுதி 5](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/13/22)

[பகுதி 6](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/15/9)

[பகுதி 7](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/17/16)

[பகுதி 8](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/23/33)

[பகுதி 9](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/25/33)

[பகுதி 10](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/27/26)

[பகுதி 11](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/29/15)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share