ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவரின் மகன் கார்த்தி சிதம்பரம், சட்டத்துக்குப் புறம்பாக, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3.500 கோடி வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்ததாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகார் தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றன. இந்த வழக்கில் இருவரையும் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தடையை ரத்து செய்ய கோரி, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அக்டோபர் 8ஆம் தேதி விசாரித்த சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்வதற்கான தடையை நவம்பர் 1ஆம் தேதி வரை நீட்டித்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அன்றைய தினமே நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரப்பட்ட சிதம்பரத்தின் மனு நேற்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது. இந்த முன் ஜாமீன் மனுவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துத் தப்பித்து வருகிறார். அவரை, எங்களுடைய கட்டுப்பாட்டில், அதாவது காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு இன்று (நவம்பர் 1) விசாரணைக்கு வரவுள்ளது.�,