வரும் ஜூலை 15ஆம் தேதியன்று சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்துள்ளார் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன்.
நிலவில் ஆய்வு செய்யும் நோக்கில், 2008ஆம் ஆண்டு சந்திராயன் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. கிட்டத்தட்ட 10 மாதங்கள் இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டில் இருந்தது. இதன் மூலமாக, நீர்வழித் தடங்கள் நிலவில் இருப்பது உள்ளிட்ட பல தகவல்கள் தெரிய வந்தன. இந்த நிலையில், சந்திராயன் 2 செயற்கைக்கோளை ஏவும் முயற்சியில் கடந்த சில மாதங்களாகச் செயலாற்றி வந்தது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ).
கடந்த 6 மாதங்களாக, இதனை விண்ணில் ஏவும் முயற்சி பலமுறை தள்ளிப்போனது. இந்த நிலையில், இன்று (ஜூன் 12) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன். அப்போது, வரும் ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். சந்திராயன் 2 உடன் 13 இந்திய அறிவியல் உபகரணங்கள் எடுத்துச் செல்லப்படுவதாகவும், இவற்றின் மூலமாக நிலவில் உள்ள தாதுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நாசாவின் உபகரணம் ஒன்று இலவசமாக எடுத்துச்செல்லப்படுவதாகவும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
சுமார் ரூ.1,000 கோடியில் தயாரிக்கப்பட்ட சந்திராயன் 2 செயற்கைக்கோள் 3.8 டன் எடை கொண்டது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 விண்கலம் மூலம் இது விண்ணில் செலுத்தப்படவுள்ளது. முதல்முறையாக நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் பிரக்யான் என்று பெயரிடப்பட்ட ரோவர் ஆய்வு வாகனம் ஒன்று சந்திராயன் 2 உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் நிலவின் தென்துருவமுனைப் பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்யும். இப்பகுதியில் இதுவரை எந்தவொரு நாடும் ஆய்வு செய்ததில்லை.
இந்த ரோவர் வாகனம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது இஸ்ரோ.
**
மேலும் படிக்க
**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)**
**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”