சத்தீஸ்கரில் இன்று தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 12.32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டமன்ற ஆயுட்காலம் முடிவதைத் தொடர்ந்து அங்கு நவம்பர் 12 (இன்று), நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே நேற்று மாவோயிஸ்ட்டு அமைப்பான, தர்பா டிவிஸ்னல் கமிட்டி, “கிராமவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்” என்று எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தீவிர பாதுகாப்புக்கிடையே, மோஹ்லா-மான்பூர், அண்டகர், பானுபிரதாப்பூர், தண்டேவாடா, பிஜப்பூர் உள்பட 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், ராஜ்நந்த்கான் உள்ளிட்ட 8 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பாண்டா என்னுமிடத்தில் வாக்குச்சாவடி அருகே ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அங்குப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், துமக்பால் நயினார் என்ற சாலையில் மாவோயிஸ்ட்டுகள் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.
இவ்வாறான பரபரப்புக்கிடையே மக்கள் வாக்களித்து வருகின்றனர். தோர்னாபால் மாவட்டத்தில் உள்ள விஸ்வாஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 100 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்தார். இன்று காலை 11மணி நிலவரப்படி 12.32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி, “ஜனநாயகத்தின் திருவிழாவில் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்கள் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்” என்று ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.
அதுபோன்று சத்தீஸ்கர் முதல்வர், ராமன் சிங், “இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் முன்வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.�,