zகூட்டணி ஓரிரு நாட்களில் இறுதியாகும்: பன்னீர்

Published On:

| By Balaji

கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் நல்ல முடிவு வெளியாகும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல் நேற்று சென்னை வந்து தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நள்ளிரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார். பேச்சுவார்த்தையில் பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் இருந்ததாக கூறப்படும் நிலையில், சுமூகமான முடிவு எட்டப்படாததாலேயே கோயல் டெல்லி சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இன்னும் சில நாட்களில் கூட்டணி இறுதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (பிப்ரவரி 15) செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சார்பில் தேசியக் கட்சிகளுடனும் மாநிலக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அது நல்ல சூழ்நிலையை எட்டியுள்ளது. இதுகுறித்து ஓரிரு தினங்களில் முடிவு வரும். முதலில் ஊடகங்களுக்குத்தான் அது தெரிவிக்கப்படும். 40 தொகுதிகளிலும் போட்டியிட கிட்டத்தட்ட 2000 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இன்னும் சில தினங்களில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா என்னும் கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், “மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள், வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியின் மூலம் அது உறுதிசெய்யப்படும்” என்று பதிலளித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share