qஇன்று சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் விதவிதமாகச் செய்து அசத்தலாம் என்று நினைப்பவர்களுக்கு கடந்து வந்த நாட்கள் அனைத்தும் வீட்டிலேயே இருக்கும் நாட்களாகி விட்டதால் எதை செய்வது, எப்படி அசத்துவது என்பதே பிரச்சினையாகி விட்டது. அப்படிப்பட்டவர்கள் இந்த வெஜிடபிள் சப்பாத்தி ஃப்ரையைச் செய்து கொடுத்து அசத்தலாம். வீட்டிலேயே விருந்து படைக்கலாம்.
என்ன தேவை?
கோதுமை மாவு – 200 கிராம்
தோலுரித்த பச்சைப் பட்டாணி – 100 கிராம்
தோலுரித்து உதிர்த்த சோளம் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் – ஒன்று (துருவவும்)
பனீர் துண்டுகள் – 100 கிராம்
காலிஃப்ளவர் – 100 கிராம் (உதிர்க்கவும்)
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய், நல்லெண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கோதுமை மாவுடன் வெண்ணெய், நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக சப்பாத்தி மாவுபோல் பிசைந்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டு பனீர் துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும். பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர், சோளம், வெங்காயம், கேரட்டை நெய்யில் வதக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். சப்பாத்தி மாவை உருண்டைகளாக்கி குழவியால் உருட்டி சப்பாத்தி தயாரிக்கவும். தோசைக்கல்லில் சப்பாத்திகளை வாட்டி எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வதக்கிய காய்கள், பொரித்த பனீர் துண்டுகள், சப்பாத்தி துண்டுகள் எல்லாம் சேர்த்து கலந்து அப்படியே சாப்பிடலாம்.�,