Zகிச்சன் கீர்த்தனா: புஸு புஸு பூரி!

Published On:

| By Balaji

சுவையும் சத்தும்!

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்தது பூரி. அம்மாக்களுக்கோ பூரி எண்ணெயில் பொரித்த பலகாரம் என அதைச் செய்யத் தயக்கம். வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு மட்டுமின்றி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தரமான எண்ணெயில் பூரியைச் சத்தான சைட் டிஷ்ஷுடன் செய்து கொடுக்கலாம். பூரிக்குப் பூரியும் ஆச்சு… சத்துக்குச் சத்தும் ஆச்சு!

**செய்வது எப்படி?**

தேவை:

கோதுமை மாவு – ஒரு கப்,

எண்ணெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவில் உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து மாவைப் பிசறவும். மாவு நன்கு மென்மையான பந்து போல் உருண்டு வரும்வரை பிசையவும். பிசைந்த மாவு நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். கடைசியாக ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்துகொள்ளவும். மாவு பிசைந்த உடனேயே பூரி திரட்டலாம், பூரிக்கு மாவை ஊறவைக்கத் தேவையில்லை. மாவைச் சின்னச் சின்ன சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

சப்பாத்தி கட்டை மற்றும் சப்பாத்திக் குழவியில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு, ஓர் உருண்டையை எடுத்து, சற்றுக் கனமான பூரியாகத் திரட்டவும். பூரியை ஒரே சீரான தடிமனில் திரட்ட வேண்டும். சில இடத்தில் மெலிதாகவும் சில இடங்களில் கனமாகவும் இருந்தால் பூரி உப்பி வராது. அது போலவே பூரியை ரொம்பவும் மெலிதாகத் தேய்த்தாலும் உப்பி வராது.

இந்த மாவை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க புஸு புஸு பூரி ரெடி.

**என்ன பலன்?**

கோதுமை மாவு தயாரிப்பதற்கு, கோதுமை வாங்கி ஒருநாள் முழுக்க வெயிலில் காயவைக்கவும். மெஷினில் கொடுத்து நன்கு நைஸாகத் திரித்துக்கொள்ளவும். கோதுமை மாவைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளவும். இப்படித் தயாரிக்கப்படும் மாவில் ‘வீட்ஜெர்ம்’ இருப்பதால் இதில் வெளியே விற்கும் மாவை விட அதிக நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து இருக்கும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share