பப்பாளிப்பழத்தை அப்படியே சாப்பிட்டாலே போதும்… உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கும். பழத்தில் மட்டுமல்ல; பப்பாளிக்காயைப் பயன்படுத்தியும் பல்வேறு உணவு வகைகளை சமைத்துப் பரிமாறி அசத்தலாம். உங்கள் சமையல் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்குக்கொண்டுசெல்ல உதவும் இந்தப் பப்பாளிக்காய் வெஜ் குருமா. இது ஆல் பர்பஸ் குருமாவாகவும் அமையும்.
**என்ன தேவை?**
பப்பாளிக்காய் – 200 கிராம்
கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி – தலா 100 கிராம்
குடமிளகாய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
பூண்டு – 8 பல்
இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்)
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சோம்பு – அரை டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
தக்காளி – ஒன்று
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
முந்திரி – 6
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
தேங்காய்த் துருவல், முந்திரியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.பப்பாளிக்காய், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள்தூள், நீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு தாளித்து அதில் நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கீறிய பச்சை மிளகாய் போட்டு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். சுருண்டு வந்தவுடன் குக்கரில் வேகவைத்த காய் கலவையைச் சேர்த்து மேலும் அரை டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதில் முந்திரி – தேங்காய்க் கலவை சேர்த்து, சீரகம் தாளித்து இறக்கவும். சுவையான பப்பாளிக்காய் குருமா தயார்.
[நேற்றைய ரெசிப்பி: பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு](https://minnambalam.com/k/2020/04/10/3)�,