�நவராத்திரி நாட்கள் (28.9.2019 அன்று) தொடங்க உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கோலாகலம்தான். இந்தக் காலத்தில் ஒப்பற்ற பூஜைகளால், துதிப்பாடல்களால் அம்பாளை நம் இல்லத்துக்கு வரவேற்று சிறப்பிக்கும் வழிபாடுகளில் ஒன்றுதான் கொலு வைபவம். ‘சகல உயிர்களிலும் ஆதிசக்தியே நிறைந்திருக்கிறாள்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் அற்புத வைபவம் இது. நம் வீட்டு கொலு வைபவத்தைக் காண அம்பாளே நேரில் வருவாள் என்கின்றன ஞான நூல்கள். இதையொட்டியே கொலு வைபவம் காண வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை முதலான மங்கலப் பொருள்களையும் நைவேத்திய பிரசாதங்களும் வழங்குகிறார்கள். அவ்வகையில் உங்கள் வீட்டு கொலு வைபவத்தில் சமர்ப்பிக்க விதவிதமான நவராத்திரி கொலு நைவேத்திய பதார்த்தங்களில் முக்கிய இடம் பிடிக்கும் இந்தச் சுண்டல்.
**என்ன தேவை?**
சிவப்புக் காராமணி, வெல்லம் (பொடித்தது) – தலா 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.
**எப்படிச் செய்வது?**
சிவப்புக் காராமணியை வெறும் வாணலியில் வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வைத்து தேவையான தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கி, நீரை வடிக்கவும்.வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கெட்டியாகப் பாகு காய்ச்சவும். வேகவைத்த காராமணியை பாகுடன் சேர்த்து தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
**குறிப்பு:**
வெல்லத்துக்குப் பதில் உப்பு சேர்த்தும் இந்தச் சுண்டலைத் தயாரிக்கலாம்.
[நேற்றைய ரெசிப்பி: எள்ளு சாதம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/09/25/1)�,