ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விடுமுறைக்குச் சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று திரும்பினர். புலவாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா ஸ்ரீநகர் – ஜம்மு சாலையில் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ ரக கார் ஒன்று வேகமாக வந்து மோதியது. பலத்த சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்ததில் வீரர்கள் வந்த பேருந்து ஒன்று உருக்குலைந்து போனது. இதில் 44 வீரர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடமே ரத்தக்களறியாகக் காட்சியளிப்பதாக, சிஆர்பிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த அமைப்பில் புதிதாக இணைந்த அடில் அகமது என்ற நபர் இத்தாக்குதலை நடத்தியதாகப் பொறுப்பேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இத்தாக்குதலுக்கு தங்கள் நாடு எந்தவிதத்திலும் காரணமல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான் தரப்பு.
வீரர்களின் தியாகம் வீணாகப் போகாது என்று இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்துமாறு உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு உத்தரவிட்டுளார். இந்த தாக்குதலுக்கு இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள், பூடான், வங்க தேசம், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
“இது உளவுத் துறை அமைப்பின் தோல்வி. வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தைப் பார்க்காமல் விட்டது எங்களது தவறு” என்று தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்.�,