தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி விருதுநகரில் கட்டப்பட்டுள்ள காமராஜரின் மணிமண்டபத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கர்மவீரர் காமராஜரின் புகழ், அவருடைய சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் விருதுநகரில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், விருதுநகருக்கு அருகேயுள்ள கள்ளிக்குடியில் ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவியல் பூங்கா, காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் மாதிரி நினைவு இல்லம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலர் சரத்குமார் தலைமையில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 15) தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வமும், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களும், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
”12 வருட கடின உழைப்பின் விளைவாக சரத்குமாரால் உருவாக்கப்பட்டது காமராஜருக்கான இந்த மணி மண்டபம்” என்று ட்வீட் செய்துள்ள ராதிகா சரத்குமார், இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர், துணை முதல்வர், விருதுநகர் எம்.எல்.ஏக்கள், மற்றும் அமைச்சர்களுக்கு நன்றித் தெரிவித்துள்ளார்.
காமராஜரின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களும் ட்வீட் செய்து வருகின்றனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ”சுதந்திரப் போராட்ட தியாகி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பாரத் ரத்னா காமராஜரை நினைவு கூருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
புதுவை முதல்வர் நாராயண சாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் காமராஜரை நினைவு கூர்வதாகப் பதிவிட்டுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
�,”