விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உயர்வால், ஏற்றுமதிச் சரக்குகளின் விலை உயரும் எனவும், அரிசி ஏற்றுமதி சரியும் எனவும் அரிசி ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெறும் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் அரிசி ஏற்றுமதி சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் போட்டியாளர்களின் அரிசி சரக்குகளை விட, இந்திய சரக்குகளின் விலை உயர்வாக இருக்கும். அரிசி ஏற்றுமதி சரிந்தால், ஆசிய, ஆப்பிரிக்கச் சந்தைகளில் இந்தியா தனது சந்தைப் பங்கை இழக்கக்கூடும். இந்தியா நழுவவிடும் வாய்ப்புகளைத் தாய்லாந்து, மியான்மர், வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கைப்பற்றிக்கொள்வர்.
இதுகுறித்து அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான பி.வி.கிருஷ்ண ராவோ ‘எகனாமிக் டைம்ஸ்’ ஊடகத்திடம் பேசுகையில், “இந்த விலை உயர்வின் விளைவாக எங்களது ஏற்றுமதிச் சரக்குகளின் விலை உயரும். இதனால், நாங்கள் பல காலமாக உருவாக்கி வைத்திருந்த வாடிக்கையாளர் வட்டாரம் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் கைகளுக்குச் சென்றுவிடும்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 4ஆம் தேதியன்று, உள்நாட்டு அரிசி விவசாயிகள் பெறும் தொகையை 13 விழுக்காடு உயர்த்தி 100 கிலோ அரிசிக்கு 1,750 ரூபாயை (25.50 டாலர்) விலையாக மத்திய அரசு நிர்ணயித்தது. அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் நரேந்திர மோடி அரசு இத்தகைய தீர்மானத்துக்கு வந்துள்ளது. நாட்டின் மொத்த அரிசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை நிலையான விலைக்கு அரசு கொள்முதல் செய்துகொள்கிறது.�,