zகலைஞனின் சுதந்திரம் அவன் கலையில் இருக்கிறது!

public

நேர்காணல்: இயக்குநர் மாரி செல்வராஜ்

**சந்திப்பு: மதரா**

*(இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் முதல் படம்தான் மாரி செல்வராஜுக்கு இயக்குநராக முதல் படம். இயக்குநர் ராம், இரஞ்சித் ஆகியோருடன் நெருங்கிய நட்பும் பெரும் மதிப்பும் வைத்திருக்கும் மாரி செல்வராஜ், வாழ்க்கை சார்ந்த கதையை நம்பி ‘பரியேறும் பெருமாள்’ ஆகக் களம் இறங்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகும் நிலையில் தனது பயணத்தின் சுவடுகள் குறித்து மின்னம்பலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார் மாரி செல்வராஜ்.)*

**இயக்குநர் ராமைச் சந்திப்பதற்கு முந்தைய மாரி செல்வராஜுக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்குமான வித்தியாசம் என்ன?**

மாரிசெல்வம் மாரிசெல்வராஜாக மாறியதே என் இயக்குநரைச் சந்தித்த பிறகுதான். வாழ்தலின் ருசியை நான் அறிந்துகொண்டதே மாரி செல்வராஜ் ஆன பிறகுதான். ஆகையால் என் நீச்சலே என் இயக்குநரை சந்தித்த பின் தொடங்கியதுதான். என் நதி அவர்.

**நீங்கள் அனுபவித்த, நேரில் பார்த்த சம்பவங்களை உங்கள் கதைகளில் பார்க்க முடிகிறது. ஒரு சம்பவம் எந்தப் புள்ளியில் இலக்கியமாக மாறும் தகுதி பெறுகிறது?**

எனக்கு வாய்த்த சம்பவங்களை இலக்கியமாக மாற்ற வேண்டுமென்று நான் எழுதத் தொடங்கவில்லை. என் இயக்குநர் எழுதச் சொன்னார் என்பதற்காக எழுதத் தொடங்கினேன். அப்புறம் எல்லாவற்றையும் மறப்பதற்காக அல்லது எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டேயிருப்பதற்காகவும் எழுதினேன் என்றும் சொல்லலாம். நான் எழுதத் தொடங்கும்போதும் சரி, இப்பவும் சரி, எது சரியான இலக்கியமென்று எனக்கு சரிவரத் தெரியாது. என் கதைகள் இலக்கியத்துக்குள் வந்துவிட்டதா என்றும் எனக்குத் தெரியாது. எழுதுவதிலும் வாசிப்பதிலும் நான் இன்னும் கத்துக்குட்டிதான். ஆனால் இப்படியே இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில் அதில் பெரும் சுவராஸ்யமிருக்கிறது. என் வாசிப்பும் சரி, என் எழுத்தும் சரி, என் வடிவத்திலே என் விருப்பத்திலே இருக்கும்.

**திரைப்பட உருவாக்கம் குறித்து நீங்கள் படித்த, படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள் எவை? அவை எந்த அளவுக்கு உதவுகின்றன?**

திரைப்பட உருவாக்கம் குறித்து நான் எந்தப் புத்தகத்தையும் தேடியதுமில்லை, வாசித்ததுமில்லை. என் இயக்குநரிடம் 12 வருடங்கள் சினிமாவைப் பற்றிப் படித்திருக்கிறேன். இன்றைக்கும் அவரைப் போய்ப் பார்க்கிறபோதெல்லாம் நச்சரித்து எதையாவது கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறேன். “அவரவர் சினிமா மொழியை அவரவரின் நேர்மைதான் தீர்மானிக்கிறது” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த ஒரு வரி போதும் என் சினிமாவை நான் மிகச் சரியாக எடுப்பதற்கு என்ற நம்பிக்கையில் என் முதல் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன்.

**உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தாலும் குறும்படம் இயக்கும் எண்ணம் உங்களுக்கு எழவில்லையா? இல்லையேல் தவிர்த்தீர்களா? ஏன்?**

சினிமா பிரியர்கள் யாருக்குத்தான் குறும்படம் எடுக்கும் எண்ணம் வராமலிருக்கும்? எனக்கும் இருந்தது. ஆனால் என் இயக்குநர் அதை அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டேன். “உன்னிடம் நான் வியப்பதே உனக்கு வாய்த்த விசாலமான அனுபவங்களையும் அது பரந்து விரிந்து பேசும் சுதந்திரமான அரசியலையும்தான். அவற்றையெல்லாம் ஏதோ ஒரு அவசரத்திற்காக சுருக்கிச் சொல்ல எத்தனிக்காதே. காத்திரு.” இதுதான் அவர் சொன்ன பதில். அதன் பிறகு எனக்கு குறும்படம் எடுக்கும் எண்ணமே வரவில்லை. நல்ல குறும்படங்களைத் தேடிப் போய் பார்ப்பேன்.

**உங்கள் ஆதர்சமான இயக்குநர் யார்?**

ஆதர்ச இயக்குநர் என்று சொல்கிற அளவுக்கு நான் அவ்வளவு சினிமா இன்னும் பார்க்கவில்லை. அடிக்கடி பார்த்துப் பார்த்து வியக்கிற ஆதர்ச படங்களின் பட்டியல் நிறைய உண்டு. ஒவ்வொரு நாளும் ஒரு படத்தின் இயக்குநர் அன்றைய நாளுக்கு நெருக்கமாகவும் நான் தேடிச் செல்ல வேண்டிய பாதையாகவும் இருப்பார்கள். குரோசவாவின் செவன் சாமுராய், இத்தாலி இயக்குநர் ஜில்லோ பொண்டேகார்வோட தி பேட்டில் ஆஃப் அல்ஜீரியர்ஸ், இங்கிலாந்து இயக்குநர் டெரி ஜார்ஜோட ஹோட்டல் ரொவாண்டா, இத்தாலி இயக்குநர் பெனினியோட லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல், பிரான்ஸ் இயக்குநர் பிரான்ஸிஸ் த்ரூபோவாட தி 400 ப்ளோஸ், மஜித் மஜிதியோட சில்ரன் ஆஃப் ஹெவன், டேனிஸ் டனோவிக் எனும் யுகோஸ்லேவியா இயக்குநரோட நோ மேன்ஸ் லேண்ட், அப்புறம் பேட்டில்ஷிப் போட்டெம்கின், இன்னும் நிறைய…

மக்கள் திரள், நிஜத்தின் வழி உருவாக்கப்பட்ட படங்களின் பாதையைத்தான் நான் எனக்கான பலமாக நம்புகிறேன். சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம்தான் என வலிந்து நம்பி வலியத் திணிக்கும் சுவராஸ்ய சினிமாக்களின் மீது எனக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. படைப்பாளிகள் மாறுவார்கள் என்கிற அச்சம் எனக்கு இருப்பதால் நமக்கு அவசியமான அவர்களின் படைப்புகளை மட்டுமே நான் பின்தொடர்கிறேன்.

சமீபமாக என்னைக் கட்டிக்கொண்டது அலெக்ஸ்ட்ரோ இன்னொரிட்டோவோட திரை ஆதிக்கம்தான். அவரோட அமேரோஸ் பெர்ரோஸ் படத்தின் பாதிப்பை என்னுடைய பரியேறும்பெருமாளில் நீங்கள் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதில் அவர் தனது காத்திரமான சினிமா மொழியில் அன்பு ஒரு ‘பிட்ச்’ என்று நிறுவியிருப்பார். நான் அதே காத்திரமான சினிமா மொழியில் அன்பு மட்டுமே நம்மிடம் இருக்கும் ஒரே ஒளி என்று நிறுவ முயற்சித்திருக்கிறேன். எதிர் எதிர் நின்று பேசினாலும் பரியேறும் பெருமாளுக்குள் அவருடைய உள்ளங்கை ரேகையும் இருக்கும்.

**கதை, திரைக்கதை எழுதிப் பார்ப்பதற்கான, பழகுவதற்கான தளம் நமது கைகளிலேயே உள்ளது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநராக செயல்படுவதற்கான வாய்ப்பை நேரடியாக திரைப்படம் ஒப்பந்தமான பின்தான் ஒருவர் பெறுகிறார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர் என அத்தனை பேரையும் சமாளித்து, ஓராயிரம் கண்கள் உற்றுநோக்குகின்ற போது தான் நினைத்ததை கொண்டுவரும் செயல்முறையை முதன்முறையாக செய்யும் போது வரும் சவால்கள் என்னென்ன?**

திரைக்கதை ஆசிரியருக்கும் இயக்குநருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இயக்குநருக்கு கற்பனையை விட அசாத்திய துணிச்சல் தேவைப்படுகிறது. திரைக்கதை என்பது படப்பிடிப்பு தளத்தில் பலருக்கும் தெரிந்திருந்தாலும் அதை எப்படி உருவாக்க வேண்டும், எப்படி வரும் என்பது இயக்குநருக்கு மட்டும் தான் தெரியும். படப்பிடிப்பு தளத்தில் உள்ள அத்தனை பேரும் இயக்குநரின் குரலுக்கு தான் காத்திருப்பார்கள். அங்கு நடைபெறும் தவறுகளுக்கு இயக்குநர் தான் முழு பொறுப்பு. அதை எதிர்கொள்ள வேண்டிய தைரியம் இயக்குநருக்கு அவசியம். இந்த செயல்முறை குறித்து கேட்டுத் தெரிந்திருந்தாலும் அதை முதல்முறை எதிர்கொள்வது சவாலான அனுபவம். அது குறித்த பயம் இருந்தாலும் அதை தாண்ட வேண்டும் என்பது தானே இலக்கு. நீச்சல் கற்க நீருக்குள் இறங்கித் தானே ஆகவேண்டும்.

**நீங்கள் சுற்றித்திரிந்த ஊரில் இயக்குநராக படப்பிடிப்பு நடத்தியபோது எந்த மாதிரியான மனநிலை உருவானது? சந்தித்த மனிதர்கள் பரிமாறிக்கொண்டது என்ன?**

அது யாரிடமும் பகிர்ந்துகொள்ளவே முடியாத உணர்வு. மீண்டும் ஒரு முறை நம் வாழ்க்கையை திருப்பி நாமே வாழ்ந்து பார்க்கிற அனுபவமாக இருந்தது. வேடிக்கை பார்க்கும் கூட்டத்திற்குள்ளேயே என் திரைக்கதையின் நிஜக் கதாபத்திரங்கள் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களின் முகம் பார்த்துக்கொண்டேதான் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் நான் சினிமா எடுப்பதாக நினைத்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு மட்டும்தான் தெரியும் நான் அவர்களைத்தான் அக்கு வேறு ஆணி வேறாகப் படம்பிடித்துக்கொண்டிருக்கிறேன் என்று.

**நடிகர்களிடம் எந்த அளவு காட்சியை விவரித்து நடிப்பை வாங்குவீர்கள்? கதையை முழுவதும் கூறுவீர்களா? நடித்து காண்பிப்பீர்களா?**

பரியேறும்பெருமாள் ஒரு லைப் ஸ்டைல் மூவி என்பதால் தொழில்முறை நடிகர்கள் மிகவும் குறைவுதான். மண் சார்ந்தவர்களையே அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். எனக்கு மட்டுமே தெரிந்த வாழ்க்கையை, சம்பவங்களை, மனிதர்களை, படம்பிடிக்க வேண்டுமென்று முடிவுசெய்த பிறகு என் நடிகர்களிடம் அந்த உணர்வுகளை மிகச் சரியாகக் கடத்த வேண்டிய அவசியம் எனக்கிருக்கிறது. ஒரு காட்சியை மட்டுமல்ல அந்தக் காட்சியின் பின்னிருக்கும் நிஜத்தையும் அரசியலையும் சேர்த்தே அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களுக்குத்தான் அது நடிப்பு. எனக்கு அது நிஜம். எனவே நான் அவர்களுக்கு நிஜத்தைச் சொல்லிக்கொடுத்து நடிப்பை வாங்கியிருக்கிறேன். ஆதலால் பரியேறும் பெருமாளில் கதிர், ஆனந்தி, யோகி பாபு இவர்களின் நடிப்பு நிச்சயமாக பேசப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கதிருக்கு ரொம்ப எளிமையான முகம் என்று சொல்வதைவிட, உண்மையை மிகச் சரியாகக் கடத்துகிற முகம் அவருக்கு வாய்த்திருக்கிறது. அவரைக் கொண்டு எளிமையான, காத்திரமான கதைகள் நிறைய பண்ண முடியும் என்பதை பரியேறும்பெருமாள் வந்த பிறகு எல்லாரும் பேசுவார்கள். ஆமாம், கதிரின் உழைப்பு பரியேறும்பெருமாளில் அசாத்தியமாகவே நிகழ்ந்திருக்கிறது. கதையை நம்பி வந்தவரிடம் கருணை இல்லாமல் வேலை வாங்கியிருக்கிறேன். அவரும் வயது, வாழ்வு, சக்திக்கு மீறிப் பெரும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் என் நன்றியும் அன்பையும் சொல்லிக்கொள்கிறேன்.

அப்புறம் ஆனந்தி, போகிறபோக்கில் நிறைய விளக்குகளை ஏற்றிவிட்டுப் போகிற முகம் ஆனந்திக்கு. அந்த முகத்தின் வழி அந்த கண்களின் வழி பிரியத்தை மிகச் சரியாகக் கடத்த முடிகிற வாய்ப்பு ஆனந்திக்குக் கிடைத்திருக்கிறது. அதை நூறு சதவீதம் கொண்டுவர முயற்சிசெய்திருக்கிறேன் என்று செல்லலாம். கதையின் போக்கையும் அது கொண்டுவந்து நிறுத்தும் முகங்களையும் பார்த்துவிட்டுப் பேராசையோடு நானும் உழைக்கிறேன் என்று முன்னுக்கு வந்து நின்ற ஆனந்தியிடம் மிக நேர்த்தியான முகபாவனைகளைப் பெற்றிருக்கிறேன். அந்த பாவனைகளின் தடத்தில்தான் என் திரைக்கதையின் நிஜம் ஊர்ந்து செல்லும். அன்பு என்பது பெரு ஒளி என்பதை நான் நிரூபிக்க ஆனந்தி தன்னால் முடிந்த உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். அவங்களுக்கும் என் நன்றியும் அன்பும்.

அப்புறம் யோகி பாபு அண்ணன். மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு காமெடி கலைஞனை மிகச் சரியாகவே நான் கையாண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். கதையை அடிக்கடி கேட்டு தன் இயல்பை, கதையை மீறாதவாறு கட்டுப்படுத்தி இன்னும் அந்தக் கதையை நிஜமாக்குவதற்கு தன்னுடைய அப்பாவித்தனத்தின் வழி பெரும் உதவி செய்திருக்கிறார். காமெடி மட்டுமில்லாமல் ஒரு அழுத்தமான கதாபாத்திரம் அவருக்கு. நான் அவரை எப்போது பார்த்தாலும் போய்க் கட்டிப்பிடித்துக்கொள்கிற அளவுக்கு சிறப்பாகவே செய்திருக்கிறார். அவருக்கும் என் நன்றியும் அன்பும்.

அப்புறம் கபாலியில் வில்லனாக நடித்த நண்பன் லிஜீஸ், மாரிமுத்து சார், வெயில் படத்தில் நடித்த வக்கீல் வெங்கடேசன், மெட்ராஸ் ஹரி என எல்லாருமே மிகச் சிறப்பான உழைப்பை அளித்திருக்கிறார்கள் எல்லாருக்கும் அன்பும் நன்றியும்.

**ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் கலை இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து கூறுங்கள்?**

ஒரு முதல் பட இயக்குநருக்கு பெரிய பலமே அவர் பார்த்துப் பார்த்துச் சேர்க்கிற டெக்னீஷியன் டீம்தான். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்வேன். ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். அவருக்கு இது மூன்றாவது படம். ஆனால் முதல் பட கேமராமேன் போலவே என்னோடு சேர்ந்து ஓடியிருக்கிறார். ஒரு லைப் ஸ்டைல் மூவியை அந்த நிஜம் மாறாமல் படம்பிடிக்க வேண்டும் என்பதற்காக ரெகுலர் சினிமா எக்யூப்மெண்ட்ஸைத் தவிர்த்து வெறும் கிம்பலை மட்டுமே தூக்கி தோளில் மாட்டிக்கொண்டு மொத்தப் படத்தையும் எடுத்து முடித்திருக்கிறோம். இப்போது பைனல் காப்பி பார்க்கும்போது எல்லா எக்யூப்மென்ஸ்டையும் பயன்படுத்தியே எடுக்கப்பட்ட படம்போல வந்திருப்பதில் இருக்கிறது கேமராமேன் ஸ்ரீதரின் உழைப்பு.

எடிட்டர் நண்பர் செல்வா ஆர்.கே. அவருக்கு இது எத்தனையாவது படமென்று எனக்குத் தெரியவில்லை ஆனால் நான் அவருடைய முதல் படமாக நினைத்துதான் வேலை வாங்கியிருக்கிறேன். தென்மாவட்டத்துல நடக்கிற கதைதான் என்றாலும் அதனுடைய ரூரல் தன்மையை முன்னிறுத்தாமல் யுனிவர்சலான படமாக மாற்ற முயற்சித்திருக்கிறோம். பிலிம் லாங்வேஜிலும் சரி கட்டிங் பேட்டர்னிலும் சரி மிகச் சுதந்திரமான முறையில் முயற்சித்திருக்கிறோம்.

கலை இயக்குநர் ராமு கதையைப் புரிந்துகொண்டு தன் பணியை ஆற்றியிருக்கிறார். இவர்களோடு என் உதவி இயக்குநர்களும் மிகச் சிறந்த உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.

**ஒரு இயக்குநராக இரஞ்சித் சுதந்திரமான கருத்துடையவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஒரு தயாரிப்பாளராக இரஞ்சித் எப்படி? தன்னுடைய முதல் தயாரிப்பிலே உங்களை இயக்குநராகத் தேர்ந்தெடுத்தது ஏன்?**

தன்னுடைய முதல் தயாரிப்பிலே இரஞ்சித் அண்ணன் என்னை இயக்குநராகத் தேர்ந்தெடுத்தது என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையைத்தான் எனக்குப் புரியவைத்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதுதான் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. அந்தச் சவாலே பரியேறும் பெருமாளைச் சுதந்திரமான படைப்பாக மாற்றியிருக்கிறது என்றும் சொல்லலாம். ஒரு இயக்குநராக மட்டுமில்லை ஒரு மனிதராகவே இரஞ்சித் அண்ணன் சுதந்திரத்தை விரும்புகிறவர். ஒருவர் தன்னுடைய வாழ்தலை எந்த அடக்குமுறையுமின்றி அச்சமுமின்றி நிகழ்த்த வேண்டும் என்றும் கனவு காண்பவர். அப்படியான கனவுகளைக் கண்டுகொண்டிருப்பவர்களைத் தேடி அலைபவர். இப்படிப்பட்டவர் தயாரிப்பாளராக இருந்தது எனக்கும் என்னோட யூனிட்டுக்கும் மிகப் பெரிய கொண்டாட்டம்.

**முதல் படத்திலேயே சந்தோஷ் நாராயணன் மாதிரி முன்னணி இசையமைப்பாளரோடு பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?**

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இரஞ்சித் அண்ணனுக்காக வந்திருப்பார் என்று சொன்னாலும் கதையைக் கேட்ட பிறகு பரியேறும் பெருமாளின் மீது அவர் காட்டிய தனித்த ஆர்வம் என்பது என்னால் இன்னும் நம்ப முடியாததுதான். கருப்பி பாடலைக் கேட்டபோதே உங்களுக்கு அது தெரிந்திருக்கும். இன்னும் வருகிற பாடல்களின் வழி ஒரு சின்னப் படத்தைத் தன் இசையின் வழி எவ்வளவு உயரத்துக்குத் தூக்கிப்பிடித்திருக்கிறார் என்பது உங்களுக்குப் புரிந்துவிடும். வசனமாகவும் காட்சியாகவும் நான் ஒரு நிஜத்தை நிரூபித்தால் இசையாக அதில் பெரும் கனவொன்றைச் சேர்த்து, பரியேறும்பெருமாளை ஒரு மேம்பட்ட சினிமாவாக மாற்றி அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார். அவருக்கு என் நன்றி எப்போதும்.

**இலக்கியம், சினிமா ஆகியவை சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறீர்களா?**

நிச்சயமாக நம்புகிறேன். இங்கு இருக்கிற ஆதிக்கம், ஆபாசம், அறியாமை அரசியல் எல்லாவற்றிலும் சினிமா மற்றும் கலையின் தாக்கம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியெனில் அதே சினிமா கலையின் வழி உக்கிரமான படைப்புகளின் வழி இவை எல்லாவற்றையும் ஒழிக்க முடியும் என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன்.

**பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநர் ராமுடன் நீங்கள் மேற்கொண்டுள்ள பயணம் மூலம் பெற்றுக்கொண்டது என்ன?**

தனிமை கிடைத்தாலும் சரி, பெரும் கூட்டம் கிடைத்தாலும் சரி, புறக்கணிப்பு கிடைத்தாலும் சரி, பெரும் பாராட்டு கிடைத்தாலும் சரி, நட்பு கிடைத்தாலும் சரி, துரோகம் கிடைத்தாலும் சரி, ஒரு கலைஞனின் சுதந்திர வாழ்வு அவன் நம்பும் கலையில் இருக்கிறது. இதுதான் அவரிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட வாழ்வு.

**திரைப்படத் துறையில் ராம் அல்லது ரஞ்சித்.. இருவரில் யாரின் தொடர்ச்சியாக நீங்கள் இருப்பீர்கள்?**

இருவரின் தொடர்ச்சியாக இருப்பதைக் காட்டிலும் இருவரின் ஒளியிலும் தென்படக்கூடியவனாக இருக்கவே விரும்புகிறேன். என்னை அவர்கள் இருவரும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் எல்லாப் படைப்பிற்குள்ளும் இருவரின் ஆன்மாவும் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *