zஏப்ரல் 17க்குள் தமிழகத்தில் தேர்தல்: முதல்வர்!

Published On:

| By Balaji

சேலத்தில் அதிமுக, பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அடுத்த மாதம் 11 அல்லது 17ஆம் தேதிக்குள் தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 9) காலை 11 மணி விமானத்தில் சேலம் வந்திறங்கினார். கலெக்டரின் மலர்ச்செண்டு வரவேற்பை ஏற்றுக்கொண்டு ஓமலூரிலுள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்துக்குச் சென்ற அவரை, அங்கு காத்திருந்த பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, துணைத் தலைவர் இரா. அருள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அப்போது இளங்கோவன் உள்ளிட்ட சேலம் மாவட்ட அதிமுகவின் முக்கிய பிரதிநிதிகள் முந்நூறு பேர் வரை உள்ளே இருந்தனர்.

பாமக, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மக்களிடத்தில் செல்வாக்குள்ள கட்சிகள் இணைந்து அமைத்த கூட்டணி இது. இதில் ஒரு சிறிய பிரச்சினை கூட வந்துவிடக் கூடாது. ஏனெனில் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பாலே விஷமாகிவிடும். எப்படியாவது கூட்டணிக்குள் குழப்பத்தை விளைவித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே முயல்கின்றன. நம்முடைய கூட்டணியைப் பார்த்து எதிர்க்கட்சிகள் எவ்வளவு எரிச்சல் அடைகின்றன என்பது அவர்களுடைய பேட்டியைப் பார்த்தாலே தெரியவரும். அவரவர் வெற்றிபெறுவதற்குதான் கட்சி வைத்துள்ளோம். திமுக வெற்றிபெற நாம் கட்சி வைத்திருக்கவில்லை.எனவே அவர்கள் எண்ணப்படி நாம் நடக்க முடியாது. நம்முடைய கூட்டணியைப் பார்த்து மிரண்டுபோய் அரண்டுபோய் பேசக்கூடாத வார்த்தையெல்லாம் பேசிவருகிறார் ஸ்டாலின்” என்றார்.

தொடர்ந்து, “நாம் ஒரு நல்ல கூட்டணியை அமைத்துள்ளோம். இந்த சந்தர்ப்பம் எப்போதும் கிடைக்காத சந்தர்ப்பம். பாமகவுடன் அடுத்த தேர்தலிலும் கூட்டணி தொடரும். சேலத்தில் அதிமுகவும் பாமகவும்தான் வலிமைமிக்க கட்சிகளாக உள்ளது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றால் அதிகளவு நாம் மத்தியில் பொறுப்பு வாங்க முடியும். அப்படி வந்தால் கட்சியும் வளரும், தமிழகமும் வளரும். ஓரே கல்லில் இரண்டு மாங்காய் போல இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாமகவினருடனும் மற்ற கூட்டணிக் கட்சிகள் பணியாற்றி அத்தனை வாக்குகளையும் நமக்குப் பெற்றுத்தர வேண்டும்” என்று அதிமுகவினருக்கு வலியுறுத்தினார்.

தேர்தல் குறித்துப் பேசியவர், “தேர்தல் தேதி இன்றைக்கு அல்லது திங்கள் கிழமை அறிவிக்கப்படலாம். எனக்கு கிடைத்த தகவலின்படி இன்னும் ஒரே மாதத்தில் தேர்தல் வந்துவிடும். தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அடுத்த 30 நாட்களுக்குள் அதாவது அடுத்த 11 அல்லது 17ஆம் தேதிக்குள் தமிழகத்துக்கு தேர்தல் நடக்கலாம். ஆகவே காலம் கடத்தாமல் தேர்தல் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் 1500 பூத் கமிட்டிகள் உள்ளன. ஒரு ஓட்டுதானே என்று சும்மா இருந்துவிட்டால் 1500 பூத் கமிட்டிக்கும் 1500 ஓட்டு போய்விடும். இது ஒரு மிகப்பெரிய கூட்டணி என்பதை இந்தத் தேர்தல் மூலம் நாம் நிரூபிக்க வேண்டும்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம், தலைமைச் செயலகத்தில் கே.சி.பழனிசாமி அதிமுகவில் இணைந்ததாக திமுக புகார் அளித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “திமுகவுக்கு எப்போதும் பொய் புகார் கொடுப்பதுதானே வேலை. ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற அடிப்படையில் அவர் எங்களை சந்தித்துள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது. அவரை நாங்கள் கட்சியில் இணைத்தோம் என்று எங்கள் கட்சிப் பத்திரிகையில் வந்துள்ளதா, அல்லது நாங்கள்தான் ஏதாவது தகவல் கொடுத்தோமா? ஏன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட எங்களை வந்து சந்தித்திருக்கிறாரே. கோரிக்கை வைப்பதற்காக என்னை பொதுமக்கள் சந்திப்பதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. அதனடிப்படையில் எங்களை வந்து சந்தித்த கே.சி.பழனிசாமி சில கோரிக்கைகளை வைத்துள்ளார். எப்படியாவது அதிமுக மீது பழிசுமத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் கூட எதுவும் கண்டுபிடிக்க முடியாது. எங்களுக்கென அலுவலகம் இருக்கிறது, யாராக இருந்தாலும் எங்கள் அலுவலகத்தில்தான் சேர்ப்போம்” என்று பதிலளித்தார்.

எழுவர் விடுதலை குறித்த கேள்விக்கு, “எங்கள் அதிகாரத்தின்படி நாங்கள் செயல்பட்டுள்ளோம். எத்தனை ஆண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளனர், அவர்களை என்றைக்காவது பரோலில் விட திமுக அரசு முயற்சி செய்ததா? நாங்கள்தான் பேரறிவாளன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பரோல் அளித்தோம். ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். திமுக ஏன் அனுப்பவில்லை. அவர்களுடைய அமைச்சரவைக் கூட்டக் குறிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்ன எழுதி வைத்திருந்தார் என்பதை என்னால் சொல்ல முடியும். அவர் மறைந்துவிட்ட காரணத்தால் அதை சொல்ல விரும்பவில்லை. ஒரு காலகட்டம் வரும்போது அதனை சொல்கிறேன். எழுவர் விடுதலைக்காக திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்று பதிலளித்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share