zஇந்த யுத்தத்தின் இலக்கு மோடி அல்ல! – தேவிபாரதி

Published On:

| By Balaji

பாசிசம் மோடியிலிருந்து தொடங்கி மோடியோடு முடிவடைந்துவிடுவதல்ல

மத, இன, மொழி சார்ந்த அடிப்படைவாத அரசியலே பாசிசத்துக்கான அடிப்படை. இவற்றோடு வேறு பல காரணிகளும் இருக்கின்றன. உதாரணமாக, தமிழகத்தில் வளர்ந்துவரும் சாதிய அரசியல். சாதி அமைப்புகள் தேவைப்படும்போது ஜனநாயகம் வழங்கும் உரிமைகளையும் சலுகைகளையும் பயன்படுத்திக்கொண்டு தங்களை வலுவூட்டிக்கொள்கின்றன, தம் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் விரிவுபடுத்திக்கொள்வதற்கும் ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஜனநாயக உரிமைகள் சாதிய ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும்போது அவை அவற்றைத் தயக்கமின்றி மீறுகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் சாதிய மேலாதிக்கத்தை ஒழிப்பதற்குப் பதிலாக அதைப் பாதுகாப்பதற்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

**சாதி வாக்கு வங்கியின் வலிமை**

ஜனநாயகத்தின் ஒட்டுண்ணியாக மாறியிருக்கும் ஓட்டு வங்கி அரசியல் முற்போக்கு சக்திகளுக்கும் இடதுசாரிகளுக்கும் சாதி மறுப்பாளர்களுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. அவை அதன் நுகத்தடிக்குக் கீழே தமது புரட்சிகர நோக்கங்களை ஒப்புக்கொடுத்துத் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கின்றன. பெருமாள்முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு எதிராகக் கொங்கு மண்டலத்தின் குறிப்பிட்ட ஒரு சாதியினர் போராடியபோது அரசு சாதியவாதிகளுக்கு அடிபணிந்து கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதைவிடவும் ஓட்டு வங்கியைத் தக்கவைத்துக்கொள்வது முக்கியமானதாக இருந்ததால் தமிழக அரசியல் கட்சிகளால் ஒரு எல்லைக்கப்பால் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராட முடியவில்லை.

ஆதிக்கச் சாதியினரால் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கெதிராக எந்த எல்லை வரை குரல்கொடுக்க வேண்டும் என்பதில் ஓட்டு வங்கியை நம்பியிருக்கும் அரசியல் கட்சிகள் தெளிவாக இருக்கின்றன.

தருமபுரி இளவரசன் படுகொலைக்குக் காரணமான வடமாவட்ட எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினரின் வாக்கு வங்கியைக் கைப்பற்றாமல் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனோ, பொதுச் செயலாளர் ரவிக்குமாரோ, திமுக பொருளாளர் துரைமுருகனின் புதல்வரோ மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாசிச மோடியை வீட்டுக்கு அனுப்ப முடியாது. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதிகள் தலித்துகளுக்கு எதிராகத் தலித் அல்லாதோரைத் திரட்டிய சாதி அரசியல் நடவடிக்கையைப் பற்றி இப்போது பேசுவது பாசிசத்துக்கு ஆதரவான நடவடிக்கையாக மாறிவிடும்.

**மோடியின் தோல்வி பாசிசத்தின் தோல்வியா?**

பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களைச் சீர்குலைக்கும் சக்திகளுக்குப் பாசிசத்தின் வேர்களை மோடிக்குள் அடையாளம் காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், மோடியை வீட்டுக்கு அனுப்புவதை பாசிசத்தின் தோல்வியாகப் புரிந்துகொள்வதைவிட அபத்தம் வேறு இல்லை. ஏனென்றால் பாஜகவும் இந்துத்துவ அடிப்படைவாதிகளும் கட்டமைத்திருக்கும் பாசிசத்தின் அடிப்படைகள் மோடியிலிருந்து தொடங்கியதல்ல. மோடியோடு முடிவடைந்துவிடக் கூடியதுமல்ல. அதற்குக் குறைந்தபட்சம் முப்பதாண்டு காலத்திய வரலாறு உண்டு.

அயோத்தியின் மீது சங் பரிவார அமைப்புகள் திட்டவட்டமாக உரிமை கொண்டாடத் தொடங்கிய எண்பதுகளில் அல்லது பாஜக தலைவர் தொடங்கிய ரத யாத்திரையில், 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில், கோவையிலும் மும்பையிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில், 2002 கோத்ரா சம்பவத்தையொட்டி குஜராத்தில் மூண்ட வன்முறையில் எனப் பாசிசம் உரம்பெற்று வளர்ந்த வரலாற்றின் புள்ளிகள் எண்ணிலடங்காதவை.

ஒருவேளை அதன் வேர்கள் நாடு சந்தித்த பிரிவினையிலிருந்து உருவாகியிருக்கலாம். சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே வட இந்தியாவின் பல பகுதிகளில் முளைத்துவிட்ட இந்து – முஸ்லிம் விரோதத்தில் வேர் கொண்டிருக்கலாம் அல்லது நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் ஏதாவதொரு புள்ளியிலிருந்து தனக்கான புள்ளிகளை இந்துத்துவ அடிப்படைவாதம் தற்போதைய பாசிச அரசியலுக்கான அடிப்படைகளை உருவாக்கிக்கொண்டிருக்கலாம்.

**உலகமயமாக்கலும் பாசிச அரசியலும்**

மறைந்தொழிந்துவிட்ட அந்த வரலாற்றைத்தான் மீட்க முயல்கிறது பாஜக. அதற்கான அரசியலைக் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகக் கட்டமைத்துவந்திருக்கிறது. மோடி அதற்கு ஒரு மூர்க்கமான வடிவத்தைக் கொடுத்திருக்கிறார். உலகமயமாக்கலுக்குப் பிந்தைய அரசியல் பொருளாதாரச் சூழல் மோடியின் பாசிச அரசியலுக்கான களன்களை விரிவடையச் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவாக எழுச்சி பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனத்தை உலகலாவிய சந்தைக்குள் திணித்திருக்கின்றன. அதற்கான அரசியல், பொருளாதார அடிப்படைகளை வேகமாக உருவாக்குகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனக் குவிப்புக்கும் சுரண்டலுக்கும் தடையாக இருக்கும் சக்திகளை, தத்துவங்களை, கோட்பாடுகளை, அவற்றின் செயல்பாடுகளை ஒடுக்காமல் உலகமயமாக்கலின் பொருளாதார நோக்கங்களை நிறைவேற்ற முடியாது.

அரசியலை மாயச் சுழல் ஒன்றின் பிடியில் வைத்திருக்க வேண்டியது அதற்கு அவசியம். சென்ற இரண்டு நூற்றாண்டுகளாகப் புழக்கத்திலிருந்துவரும் சொல்லாடல்களை அடியோடு மாற்ற வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தொழிலாளர் ஒற்றுமை, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், சோசலிஷம், பொதுவுடமை, மதச்சார்பின்மை, சமூக நீதி என ஆயிரக்கணக்கான சொல்லாடல்கள். அவை பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனக் குவிப்புக்கும் சுரண்டலுக்கும் தடையானவை. அவற்றைப் பொதுமனங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், புதிய உலகத்திற்கான புதிய சொல்லாடல்களை உருவாக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கான புதிய சொல்லாடல்கள்.

அவை புதிய உலகின் புதிய அரசியல் கோட்பாடுகளை, புதிய செயல்திட்டங்களை வடிவமைக்கின்றன. சமூக நீதி, மனித உரிமைகள், போன்ற இன்னும் வழக்கொழிய மறுக்கும் சொல்லாடல்களுக்கான இடங்களைத் தன்னார்வக் குழுக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் உறுதிப்படுத்தும்.

ஐநா சபையின் கீழ் இயங்கும் அமைப்புகள் பட்டினிச் சாவுகளைத் தடுக்கும். மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும். மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டும். குழந்தைகள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் நலன்களை அந்த அமைப்புகளே பாதுகாக்கும். அரசுகள் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும். செருப்பு வழங்கும். தொலைக்காட்சிப் பெட்டிகளையும் மடிக்கணினிகளையும் வழங்கும். விவசாயிகளுக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழே அல்லாடுபவர்களுக்கும் 2,000, 6,000 என மானியங்களை அள்ளி வழங்கும். சந்தைப் பொருளாதாரத்தின் புதிய விதிகளுக்கேற்ப வேறு என்னென்னவெல்லாம் தேவையோ அவற்றை வழங்கும்.

புதிய உலகம் ஜனநாயகத்தையும் இலவசமாகவே வழங்குகிறது. ஒருபடி மேலே போய் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வாக்காளர்களுக்கு 200, 500, 1,000 என ரொக்கப் பணத்தையும் வழங்குகிறது. இதை நீங்கள் மக்கள்நல அரசுகளின் சமூகநலத் திட்டங்கள் என்றோ, வளர்ச்சி என்றோ, சமூக நீதி என்றோ, புதிய உலகின் புதிய நீதி என்றோ பெயரிட்டுக்கொள்ளலாம். அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கான பாதுகாப்புக் கவசம் என்றோ, பாசிசம் என்றோ அழைக்கலாம்.

உலகளாவிய அரசியல் போக்குகளுக்கு நீங்கள் இந்தப் பெயர்களில் ஏதாவது ஒரு பெயரைச் சூட்டிக்கொள்ளலாம். மோடி சூட்டியிருக்கும் பெயர் புதிய இந்தியா.

ஆனால், அது அவருக்கு முன்பாகவே உருவாகிவிட்ட ஒன்று. மோடியின் தாரக மந்திரங்களில் ஒன்றாக ஒலித்துக்கொண்டிருக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்னும் முழக்கம் அமெரிக்காவிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்டது. தனது புதிய இந்தியாவுக்குக் கூடுதலாகச் சில சொல்லாடல்களை உருவாக்க மோடி விரும்புகிறார் அவ்வளவே. மோடியின் புதிய இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஜனநாயகத்துக்கு எதிரான போராக மாற்றியிருக்கிறது என்பதை நீங்கள் மோடியின் தனித்தன்மைக்குச் சான்றாக எடுத்துக்கொள்ள விரும்பினால் எடுத்துக்கொள்ளலாம்.

மக்களவைத் தேர்தலின் மைய அரசியல் பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் முன்வைக்க விரும்பும் பாசிசத்துக்கு எதிரான போர் ஒருவேளை அவர்கள் விரும்புவது போல் அவரை வீட்டுக்கு அனுப்ப உதவலாம். ஆனால், நிச்சயமாக அது பாசிசத்துக்கு முடிவு கட்டும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக இருக்கவே முடியாது. ஏனென்றால் அதன் வேர்கள் மோடியில் தொடங்கி மோடியில் முடிந்துவிடுபவை அல்ல. மிகவும் ஆழமானவை. மிகவும் பரவலானவை. பாசிசத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் இதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகவாதிகள் இதை எச்சரிக்கையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்.

[எதிர்க்கட்சிகள் பேச மறுக்கும் பிரச்சினை](https://minnambalam.com/k/2019/03/30/17)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share