இந்தோனேஷியாவின் ஜாவா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் தேதியன்று, இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கால் பினாங் புறப்பட்ட லயன் ஏர் நிறுவன விமானமொன்று விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு விமானிகள் உட்பட 189 பேர் பயணித்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில், இதன் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில மணி நேரம் கழித்து, ஜாவா கடலில் அவ்விமானத்தில் இருந்த குப்பைகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, அந்த கடல் பகுதியில் விமானத்தைத் தேடும் பணி ஆரம்பமானது.
இந்தோனேஷியாவின் தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனம் உட்பட அந்நாட்டு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விமானம் கடலில் விழுந்ததற்கான காரணத்தை அறியும் வகையில், கடந்த 3 நாட்களாக கருப்புப்பெட்டியைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. கடலுக்கு அடியில் பயன்படுத்தப்படும் ட்ரோன் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
கடலின் அடி நீரோட்டம், தரைமட்டத்தில் உள்ள சேறு போன்ற இடையூறுகளுக்கு மத்தியில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிதைந்த நிலையில் பல பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. இது குறித்து, இந்தோனேஷிய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 1) காலையில் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு, மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் கப்பலுக்குக் கொண்டுவரப்பட்டது. தாங்கள் இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்திருப்பதாகக் கூறியுள்ளார் டைவிங் வீரர்களில் ஒருவரான ஹெண்ட்ரா. விமானத்தைத் தேடும் பணியானது சரியான இடத்தில் நடைபெற்று வருவதை இது உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் இந்தோனேஷிய அதிகாரிகள்.
இந்த கருப்புப் பெட்டியில் உள்ள பிளைட் டேட்டா ரிகார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரிகார்டரில் பதிவாகியுள்ள தகவல்கள் மூலமாக விபத்துக்கான காரணம் தெரியவர வாய்ப்புள்ளது. விமானத்தின் சிறு பகுதிகளே கிடைத்துள்ள நிலையில், கருப்புப் பெட்டி கண்டுபிடிப்புக்குப் பின் இத்தேடல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
�,”