இந்தியாவில் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை 20.7 கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று வருடங்களாக சமையல் எரிவாயு தேவை 33 சதவிகிதத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. புதிதாக 5000 விநியோகஸ்தர்கள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் கிராமங்களுக்கு தான் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (15.07.2017) மேற்குவங்கத்தில் PMUY திட்டத்தில் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்கினார்.
பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களே இந்தத் திட்டத்தில் எரிவாயு இணைப்பை பெறுகின்றனர். மேலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்படி கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் 3.25 கோடி இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியனுக்கும் அதிகமாகும். ஆனால் அத்தியாவசியமான சமையல் எரிவாயு இணைப்பை பெற்றவர்கள் எண்ணிக்கை இப்போதுதான் 20.7 கோடியை எட்டியுள்ளது.�,