இந்தாண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறலாம் என்று தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று(மார்ச் 8) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மருத்துவக் கலந்தாய்வு முழுவதையும் ஆன்லைனில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். “இந்த கல்வியாண்டு முதல் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற வாய்ப்பு உள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கும், தங்களுக்கு விருப்பமான படிப்பை லாக் செய்வதற்குமான மென்பொருளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு பரிசோதனை செய்து வருகிறது.
நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மருத்துவக் கலந்தாய்வுக்காக சென்னை வரை வரும் நிலை உள்ளது. ஆன்லைன் கலந்தாய்வினால் இந்த சிரமம் இருக்காது. முதுநிலை மருத்துவப் படிப்பிற்காகக் குறைந்தது 10,000 விண்ணப்பங்களை எதிர்ப்பார்க்கிறோம். வரும் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் புதிதாகப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.�,