தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள பொதுப் பாதையை மீட்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு, மதுரை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றமதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முகமது ரஷ்வி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், மதுரை மாவட்டம் கே.கே நகரில் உள்ள 80 அடி சாலையில்உள்ள பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று, மானகிரி கிராமத்திற்குச் செல்லும் பொது சாலையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளதாகவும், கார் நிறுத்துமிடமாகப் பயன்படுத்திவருவதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
பொது சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மானகிரி கிராமத்திற்குச் செல்லும் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாக, தனது மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி பொதுப்பாதையை மீட்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று (செப்டம்பர் 14) இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.�,