ஆளும் அதிமுக ஏற்கனவே மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மையமாக வைத்து மேலும் ஒரு அணி உருவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வர வேண்டும். இல்லையேல், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் பதவியைத் துறப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்படி தஞ்சை செங்கிப்பட்டியிலே எய்ம்ஸ் மருத்துவனை அமையும் என்று கூறியிருக்கிறார் தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு. இந்தப் போட்டியால் அதிமுகவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று(11.6.2017) திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. புறநகர் மாவட்டச் செயலாளரும், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சியே மீண்டும் வெற்றிபெற்று ஆளும் ஒரு வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறார். முன்பு அ.தி.மு.க.வினரின் குரலாக ஜெயலலிதா குரல் இருந்தது.
தற்போது அவர் மறைந்துவிட்டதால் மக்களின் கருத்துக்களை எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகள் கூற வேண்டியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தின்படி எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்க எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறோம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மக்களுக்காகக் காவிரி நீர் பெற்றுத்தர உண்ணாவிரதம் இருந்தார். அவர் வழியில் வந்த நாங்கள் மக்கள் பணிசெய்ய பதவியையும் துறக்க தயாராக இருக்கிறோம்.
இடைத்தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவோம் என மக்களிடம் வாக்குகள் சேகரித்தோம். அதனை நிறைவேற்றவே எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். அந்த முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டேன்.” என்றார்.
ராஜன் செல்லப்பா
இதையடுத்து பேசிய எம்எல்ஏ. ராஜன் செல்லப்பா, “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் வரை நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்துவோம். மதுரை மாவட்ட அமைச்சர்கள், எம்.எல். ஏக்கள் கட்சியினரின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறோம்.
மக்களுக்கு சேவை செய்யவே நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்காக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஏ.கே.போஸ் போன்றோர் ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமல்ல பல்வேறு தொழிற்சாலைகள் வரவேண்டியுள்ளது. அதனைப் பதவியில் இருந்து நாம் சாதித்து காட்ட வேண்டும்” என்றார்.
இதற்கு முன்பு மதுரை டி. கல்லுப்பட்டியில் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., “மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் நானும் ராஜிநாமா செய்ய தயார். மாவட்டத்தில் உள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களையும் ராஜிநாமா செய்ய வலியுறுத்துவேன்” என்றார்
துரைக்கண்ணு
இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழக வேளாண்துறை அமைச்சர் நேற்று பேசியிருக்கிறார். அமைச்சர் துரைக்கண்ணு நேற்று அய்யம்பேட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எய்ம்ஸ் மருத்துவமனையைத் தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டுமெனப் பிரதமரிடம் கடிதம் கொடுத்திருந்தார். எனவே அவர் விரும்பியபடி தஞ்சை மாவட்டத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். எய்ம்ஸ் மருத்துவமனை அமையத் தேவையான இடவசதி, குடிநீர் வசதி ஆகியவை இந்தப் பகுதியில் தான் உள்ளது.
மேலும் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையம், ரெயில் நிலையம் இவற்றோடு இயற்கையான சூழ்நிலையும் இணைந்து இப்பகுதியில் தான் உள்ளது. இந்த மருத்துவமனை தஞ்சை மாவட்டத்தில் அமைவதால் டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் விரைவாக வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்வதற்கு எளிதாக இருக்கும். எனவே தமிழக அரசு தஞ்சை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடர் அமைதியான முறையில் நடைபெறும். அந்த கூட்டத் தொடரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அவை உடனே செயல்படுத்தப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பி.எஸ்
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தன் பங்கிற்கு எய்ம்ஸ் மருத்துவனைக் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் ஓ. பன்னீர் செல்வம் நேற்று (11.6.2017) செய்தியார்களிடம் கூறியதாவது:
மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருதினார். அவரது விருப்பமும் அதுவே. தமிழக அரசு, மதிப்புகூட்டு வரியை ஒரு சதவீதமாக குறைக்க வேண்டும். முத்திரைத்தாள் கட்டணத்தையும், மதிப்புகூட்டு வரியையும் மத்திய அரசு நிர்ணயித்தபடி பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொ. ராதாகிருஷ்ணன்
அதிமுகவினர் இப்படி போட்டிபோட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருக்க, மிகவும் நக்கலான தொனியில் தன் கருத்தைக் கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் கூறியதாவது, “எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தமிழக அமைச்சர்கள் தனித்தனியாக ராஜிநாமா செய்யாமல், ஒட்டு மொத்தமாக ராஜிநாமா செய்துவிட்டால் மகிழ்ச்சி., அரசில் நிலவும் கருத்து வேறுபாடுகளே எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்துக்கு காரணம்” என்று தெரிவித்தார்.
திண்டுக்கல் சீனிவாசன்
இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “எய்ம்ஸ் மருத்துவனை அமையக் கால தாமதம் ஏற்படத் தமிழக அரசு காரணமில்லை. ஒவ்வொரு தொகுதியில் உள்ளவர்களும் தங்கள் தொகுதியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அது சாத்தியமில்லை. இதற்குத் தமிழக முதல்வர் அழகான ஒரு தீர்வை சொல்லியிருக்கிறார். அதாவது, “மத்திய அரசு எங்கே எய்ம்ஸ் மருத்துவனையை அமைக்க விரும்புகிறதோ அங்கே அமைக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். ஆகவே இதில் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டிய அவசியம் ஏதுமில்லை” என்று கூறியிருக்கிறார்.�,