�2020ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டு இலக்கைக் கட்டாயம் அடைவோம் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை 16 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றியது. இது இந்திய வரலாற்றிலேயே அந்நிய நிறுவனம் ஒன்று இந்தியாவில் மேற்கொள்ளும் மிகப் பெரிய முதலீடாகும். இதன் மூலம் 2018ஆம் ஆண்டில் மொத்தம் 38 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய முதலீடுகளை இந்தியா ஈர்த்ததோடு, சீனா ஈர்த்த முதலீட்டை (32 பில்லியன் டாலர்) விஞ்சி இந்தியா சாதனை படைத்திருந்தது. யூனிலிவர், ஸ்கைனெய்டர் உள்ளிட்ட நிறுவனங்களும் சென்ற ஆண்டில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்திருந்தன.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு, மும்பையில் தொழில் துறைக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், “சென்ற ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டில் மிகப் பெரிய சாதனை படைத்திருந்தோம். 2020ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்க இலக்கு வைத்துள்ளோம். அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்நிய முதலீட்டுக் கொள்கையில் துறை வாரியாக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதன் மூலம் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்க முடியும்” என்றார்.
ஏற்றுமதி வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த நிதியாண்டில் 323 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறும் எனவும் சுரேஷ் பிரபு இக்கூட்டத்தில் கூறினார்.�,