zஅதிக செலவில் நடத்தப்பட்ட தீவிரவாதியின் கொலை!

Published On:

| By Balaji

இன்று (மார்ச் 10) ஒசாமா பின் லேடன் பிறந்த தினம்!

ஆஸிஃபா

ஒசாமா பின் லேடன் என்ற பெயரைக் கேள்விப்படாதவர்கள் இருக்கவே முடியாது. அந்தளவுக்கான தாக்கத்தை உலகில் ஏற்படுத்திவிட்டுச் சென்றவர் பின் லேடன். அல் கொய்தா என்ற அமைப்பை நிறுவி, உலகை உலுக்கிய பல தீவிரவாதத் தாக்குதல்களைச் செய்த பின் லேடன் பிறந்த தினம் (மார்ச் 10) இன்று.

1957ஆம் ஆண்டில், சவுதி அரேபியாவில், மிகப் பெரிய வணிகத்தைச் செய்துவந்த முகம்மது பின் ஆவாத் பின் லேடனுக்குப் பிறந்தவர்தான் ஒசாமா பின் லேடன். ஒரு பெரிய கோட்டை மாதிரியான வீட்டில் வளர்ந்த ஒசாமாவின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒசாமா, 17ஆவது குழந்தையாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. ஒசாமாவின் அப்பாவுக்கு மொத்தம் 10 மனைவிகள், 58 குழந்தைகள். இதில் ஒசாமாவின் அம்மாவைத் தவிர மற்ற மனைவிகள் அனைவரும் சவுதியைச் சேர்ந்தவர்கள். அவர் மட்டும் அஸ்ஸிரியா நாட்டைச் சேர்ந்தவர். இதனால் குடும்பத்தினுள்ளேயே ஒடுக்கப்பட்டார்.

ஒசாமா பின் லேடன், 1979ஆம் ஆண்டு வரை தன்னுடைய சிவில் இன்ஜினீயரிங் கல்வியைத் தொடர்ந்தார். அதன்பிறகு, பாகிஸ்தானில் உள்ள முஜாகிதீன் படையில் இணைந்து, ஆப்கானிஸ்தானிலிருந்த சோவியத் யூனியனுக்கு எதிராகச் சண்டையிட்டார். முஜாகிதீன் படையினருக்குத் தேவையான பணத்தைப் பெருமளவு இவர் கொடுத்ததால், மிகப் பிரபலமான நபராக மாறினார். 1988ஆம் ஆண்டு, அல் கொய்தா அமைப்பை நிறுவியதை அடுத்து, சவுதி நாட்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து சூடான் நாட்டுக்கு இடம்பெயர்ந்தார்.

1996ஆம் ஆண்டில், அமெரிக்காவும் அங்கிருந்து வெளியேறச் செய்தது. ஆப்கானிஸ்தானிற்கு மீண்டும் இடம்பெயர்ந்த பின்னர், அமெரிக்காவுக்கு எதிராக போர் அறிவித்தார். செப்டம்பர் 11 தாக்குதலுக்கான நோக்கமாக இவர் தெரிவித்தது, 1982ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாடு லெபனானில் ஊடுருவியதற்கு அமெரிக்க அளித்த ஆதரவுதான்.

ஒசாமா பின் லேடனுக்கு ஐந்து மனைவிகள் மற்றும் 24 குழந்தைகள். தனது முதல் திருமணத்தை 17ஆவது வயதில் செய்து கொண்டார். ஒசாமா ஒரு நல்ல கவிஞர் என்றும், இலக்கியத்தில் பெரும் ஆர்வமுடையவர் என்றும், அரேபிய மொழியில் எழுதுவார் என்றும் சொல்லப்படுகிறது. அவருடைய கவிதைகள் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. மேலும், இவர் 2011ஆம் ஆண்டு, ஒபாமாவுக்குப் பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்களில் ஈடுபடுமாறு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். பின் லேடன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில், அவருக்கு மிகவும் பிடித்த உணவாக சொல்லப்படுவது ஆப்பிள் வித் சாக்லேட் காம்போதானாம்!

பின் லேடன், தன்னை பின்பற்றுபவர்கள் இசை கேட்பதையும், ஐஸ் நீரைக் குடிப்பதையும் தடை செய்திருந்தாராம். பின் லேடனைக் கண்டுபிடிப்பதற்கு ஆன செலவுகள் 450 பில்லியன் அமெரிக்க டாலர்களாம். உலகிலேயே அதிகமான பணம் செலவு செய்து நடத்தப்பட்ட தீவிரவாதியின் கொலை இதுவாகத்தான் இருக்கும்!

மே 2, 2011 அன்று, ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய உடல் கடலில் வீசப்பட்டது. ஹெலிகாப்டர் வரும்போதே, அது அமெரிக்காவினுடையது என்று பின் லேடன் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் தன்னுடைய சில குழந்தைகளுடன் இணைந்து பிரார்த்தனை செய்துவிட்டு, தன் குடும்பத்தினரை அவ்விடத்தைவிட்டு வெளியேறச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய உடலோ, வேறு எந்த தடயமோ கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒசாமா பின் லேடன் மரணத்தைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற உயிலில், அவருடைய குழந்தைகளை அல் கொய்தாவில் இணைய வேண்டாமென்றும், ஜிஹாதில் பங்குபெற வேண்டாமென்றும் சொல்லியிருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share