இந்தியாவின் எரிபொருள் தேவை அக்டோபர் மாதத்தில் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் ஓர் அங்கமான பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு, இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் நுகர்வு 17.99 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. இது 2017ஆம் ஆண்டின் அக்டோபர் மாத அளவை (17.3 மில்லியன் டன்) விட 4 சதவிகிதம் கூடுதலாகும். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்தியாவில் சமீப காலமாகவே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டிருந்தது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் தேவை 0.3 சதவிகிதம் குறைந்து 16.5 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது.
அக்டோபர் மாதம் 4ஆம் தேதி பெட்ரோலியப் பொருட்களுக்கான கலால் வரியை அரசு குறைத்த பிறகு பெட்ரோலியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 4.6 சதவிகிதம் உயர்ந்து 2.33 மில்லியன் டன்னாகவும், டீசல் விற்பனை 6.7 சதவிகிதம் உயர்ந்து 6.98 மில்லியன் டன்னாகவும் இருந்துள்ளது. விமான எரிபொருள் 9 சதவிகித உயர்வுடன் 6,89,000 டன் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரமான சமையல் எரிவாயுப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதால், சமையல் எரிவாயு நுகர்வு அக்டோபர் மாதத்தில் 2.06 மில்லியன் டன்னாக இருந்துள்ளது.�,