தனிஷ்க் நிறுவனத்துக்கு விளம்பர அமைப்புகள் ஆதரவு!

Published On:

| By Balaji

தனிஷ்க் நிறுவனத்துக்கு, மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ள இந்தியாவின் உயர் மட்ட விளம்பர அமைப்புகள்,  ‘அச்சுறுத்தும் நடத்தைக்கு’ எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

டாடா குழுமத்தின் பிராண்ட் நிறுவனமான தனிஷ்க் , பண்டிகை காலத்தையொட்டி சமீபத்தில் நகைக்கடை விளம்பரத்தை வெளியிட்டது. ஒற்றுமை எனப் பொருள்படும், ஏகத்வம் என்று பெயரிடப்பட்ட நகைகளைப் பிரபலப்படுத்தும் நோக்கில் 43 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்துக்குப் பெரும்பாலானவர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில்,  வலதுசாரி ஆதரவாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அந்த விளம்பரத்தில் இஸ்லாமியக் குடும்பம் ஒன்று தங்களது இந்து மருமகளுக்கு, இந்து முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது போலவும், இதனைக் கண்டு ஆச்சரியம் அடையும் மருமகள்,  ‘இது உங்கள் வீட்டு வழக்கம் இல்லையே’ என்று கேட்பது போலவும், அதற்கு, மாமியார்  ‘எல்லா வீட்டிலும் மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வழக்கம் தானே’ என்று கூறுவதுபோலவும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த, விளம்பரத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு சிலர் இது, லவ் ஜிகாத்தை, தூண்டும் விதத்தில் இருப்பதாகக் குற்றம் சாட்டினர். தனிஷ்க் கடையில் நகை வாங்கக் கூடாது என்று தெரிவித்து ட்விட்டரில் #Boycotttanishk என்ற  ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினர். குஜராத், கட்ச் மாவட்டம், காந்திகிராமில் உள்ள தனிஷ்க் நிறுவனத்துக்கு மன்னிப்பு கேட்கச் சொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து கடையின் மேலாளர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத், பல மட்டங்களில் இந்த விளம்பரம் தவறாக உள்ளது. லவ் ஜிகாத் மட்டுமின்றி பாலியல் உணர்வையும் ஊக்குவிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறு, எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இந்த விளம்பரத்தை தனிஷ்க் நிறுவனம் திரும்பப் பெற்றது. அந்த நிறுவனம் தரப்பில்,  ‘இந்த சவாலான காலங்களில் பல்வேறு தரப்பு மக்கள் ஒன்றாக இணைந்து ஒற்றுமையின் அழகைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது. ஆனால் விளம்பரம் எடுக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக மாறுபட்ட மற்றும் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்தது.  கவனக்குறைவாக உணர்ச்சிகளைத்  தூண்டியதால் அதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். எங்கள் ஊழியர்கள், கூட்டாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் என அனைவரின் உணர்வுகளையும் நல்வாழ்வையும் மனதில் கொண்டு இந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுகிறோம் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

விளம்பரம் நீக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர், “இந்து -முஸ்லிம் ஒற்றுமை இந்தத்துவாவைச் சேர்ந்தவர்களை இவ்வளவு எரிச்சல் ஊட்டினால், உலகின் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் நீண்டகால அடையாளமான இந்தியாவை அவர்கள் ஏன் புறக்கணிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதுபோன்று பலரும் இது, மிகவும் அழகான விளம்பரம் என்று தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவின் இரு உயர்மட்ட விளம்பர அமைப்புகளான, தி அட்வர்டைசிங் கிளப் மற்றும் சர்வதேச விளம்பர சங்கத்தின் இந்திய பிரிவு, தனிஷ்க் நிறுவனம் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

“தனிஷ்க் மற்றும் அதன் ஊழியர்கள் மீதான அச்சுறுத்தலுக்கு தி அட்வர்டைசிங் கிளப் கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறது. இந்த விளம்பரம் எந்த வகையிலும், எந்த ஒரு நபரையோ, அமைப்பையோ, மதத்தையோ இழிவுபடுத்தும்  வகையில் இல்லை. எந்த ஒரு தேசிய உணர்வையும் புண்படுத்தவில்லை. படைப்பு வெளிப்பாடு மீதான இத்தகைய, ஆதாரமற்ற மற்றும் பொருத்தமற்ற தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியது.  எங்களது ஆதரவு எப்போதும் தனிஷ்க் குழுவுக்கு இருக்கும்”  என்று தி அட்வர்டைசிங் கிளப் தெரிவித்துள்ளது.

சர்வதேச விளம்பர சங்கத்தின் இந்தியப் பிரிவு, “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்று அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட விஷயம் குறித்த ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் பார்வைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இத்தகைய அச்சுறுத்தலுக்கு எதிராக  நடவடிக்கை எடுத்து வணிகங்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,  “இந்த விளம்பரம் எனக்குப் பிடித்துள்ளது. மிகவும் அழகாக உள்ளது. விளம்பரத்தில் எந்த தவறும் கிடையாது. பலரின் எதிர்வினை காரணமாக அந்நிறுவனம் விளம்பரத்தை நீக்கியுள்ளது.   திருமணத்திற்காக மதம் மாறுவது தான் தவறு. அவரவர் மதத்திலிருந்து கொண்டு திருமணம் செய்தல் சிறப்பானது” என்று கூறினார்

**-பிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share