இந்தியாவில் கொலைகளுக்கான காரணங்களில் காதல் விவகாரங்கள் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருதலைக் காதல், பிரேக் அப் எனப் பல காரணங்களைக் கூறி இளம்பெண்களைப் பொது இடங்களிலும் வகுப்பறைகளிலும் வைத்துத் தாக்கப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது .
இந்தச் சூழலில் சிதம்பரத்தில் காதல் விவகாரத்தால் இளம்பெண்ணை, அவரை காதலித்த நபர் சரமாரியாகத் தாக்கிவிட்டு போலீஸில் சரணடைந்துள்ளார்.
கடலூர், பண்ருட்டியை அடுத்த காட்டான்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (18) வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். விழுப்புரம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கலமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (22) தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தாம்பரம் சிப்ஸ் கடையில் பணியாற்றி வந்த இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக இருவருக்குமிடையே எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தனலட்சுமி வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதற்காக அவர் சிதம்பரம் வடமூர் பகுதியிலுள்ள அவரது பாட்டி ராதா வீட்டுக்கு வந்துள்ளார்.
தனலட்சுமிக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதை அறிந்த சக்திவேல் ஆத்திரமடைந்து, நேற்று வடமூரில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் அப்பெண்ணைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கழுத்து, கை, மார்பு பகுதிகளில் பலத்த காயமடைந்த தனலட்சுமி கீழே விழுந்துள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த தனலட்சுமி உயிரிழந்துவிட்டதாக நினைத்து சக்திவேல் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ஆனால், அப்பெண் உயிரிழக்கவில்லை. தற்போது சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையேயான இந்தக் காதல் விவகாரத்தால் கலவரம் ஏதாவது ஏற்படுமோ என்ற பதற்றம் கடலூரில் ஏற்பட்டுள்ளது.�,