பெண் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது!

Published On:

| By Balaji

சேலத்தில் பெண் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள கூணான்டியூர் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுடன், மாவட்டத் திட்ட அலுவலரும் துணை ஆட்சியருமான சுசிலா ராணி டெங்கு விழிப்புணர்வு பணியில் நேற்று (நவம்பர் 6) ஈடுபட்டிருந்தார். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இளைஞர் பிரபாகர் எதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துகின்றனர் என துணை ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை ஏன் மாணவர்கள் மீது திணிக்கிறீர்கள், இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படாதா எனவும் பிரபாகர் கேட்டுள்ளார்.

தமிழக அரசின் உத்தரவின் பேரில்தான் பள்ளி மாணவர்களைக் கொண்டு டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபடுவதாக துணை ஆட்சியர் சுசிலா ராணி விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பிரபாகர் துணை ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு நடந்த பிரச்சினையை பிரபாகர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது பிரபாகரின் செல்போனை துணை ஆட்சியர் தட்டிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகர் துணை ஆட்சியர் சுசிலா ராணியைக் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்த சம்பவத்தால் காயமடைந்த துணை ஆட்சியர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார். அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பிரபாகரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share