வளர்ந்துவரும் விஞ்ஞான உலகில் தினம்தோறும் பல புதுப்புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 23 வயதான அருண்பிரபு சரக்கு ஆட்டோவில் நடமாடும் வீட்டினை வடிவமைத்துள்ளார். பிஆர்க் படித்துள்ள அருண்பிரபு ஒரு லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் வீட்டினை கட்டியுள்ளார்00.
பெருகிவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும், வீடுகளின்றி வாழ்ந்து வரும் மக்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வுலகில் மக்கள்தொகை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதனை சமாளிக்கப் புதுவிதமாக, நடமாடும் வீடு ஒன்றினை வடிவமைத்து, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் அருண்பிரபு. இவரது பெற்றோர் குணசேகரன், கோமதி. இவர்கள் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகின்றனர்.
2018 ஆம் ஆண்டு பிஆர்க் படிப்பை முடித்த அருண்பிரபு புதுமையான கண்டுபிடிப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பரமத்திவேலூரில் 37,000 ரூபாய் செலவில் சரக்கு ஆட்டோ ஒன்றினை விலைகொடுத்து வாங்கி உள்ளார். மேலும், அதனை மறுசுழற்சி முறையில் ஒவ்வொரு அறையாக வடிவமைத்துள்ளார் .
இந்த ஆட்டோவில் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை, மொட்டை மாடி என பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார வசதிக்காக சோலார் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வண்டியின் மேல் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைத்து ‘ஹைட்ராலிக் பம்ப்’ மூலம் தண்ணீர் ஏற்றும் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் வீட்டின், நீளம், அகலம், உயரம் என அனைத்தும் 6 அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடமாடும் வீட்டின் மேல் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்வதுடன் படுத்தபடியும் ஓய்வு எடுக்கலாம். வீட்டில் வெளிச்சத்துக்காக 600 வாட்ஸ் அளவு சூரிய மின்சக்தி பேனல் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் பழைய பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதற்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை ஐந்து மாதத்தில் முடித்துள்ளார் அருண்பிரபு. இந்த கண்டுபிடிப்பு அவரின் பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
�,”