hஉங்கள் மொபைல் எண் 11 இலக்கமாக மாறுகிறதா?

Published On:

| By Balaji

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறையில் சில பெரிய மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், நிலையான இணைப்பு மற்றும் மொபைல் சேவைகளை உறுதிப்படுத்த ‘ஒருங்கிணைந்த எண் திட்டத்தை’ உருவாக்க சில பரிந்துரைகளை அரசுக்கு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானதாக, தற்போது பயன்பாட்டில் உள்ள 10 இலக்கங்களுக்கு பதிலாக மொபைல் எண்களுக்கு 11 இலக்கங்கள் என மாற்றுவதும் என்றும் முக்கிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதன் மூலம் தற்போதுள்ள மொபைல் எண்கள் கூடுதலாக முதல் இலக்கமாக பூஜ்ஜியத்தைக் கொண்டிருக்கலாம். புதிய மொபைல் எண்கள் எதிர்காலத்தில் புதிய இலக்கத்துடன் தொடங்கலாம். மேலும், டிராயின் இரண்டாவது மிகப்பெரிய பரிந்துரை லேண்ட் லைன் எண்களில் இருந்து மொபைல் எண்ணை அழைக்கும் போது கட்டாயம் பூஜ்யம் சேர்க்க வேண்டும் என்பது. மேலும், இணைய டாங்கிள்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்கள் 10 இலக்கங்களில் இருந்து 13 இலக்கங்களாக மாறும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தகவல்களை அடுத்து இன்று (மே 31) தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இதுகுறித்து விளக்கம் வெளியிட்டுள்ளது.

“தொலைத் தொடர்புத் துறைக்கான போதுமான எண் வளத்துக்காக சில பரிந்துரைகளை டிராய் மே 29 ஆம், தேதி செய்திருந்தது. அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு சில ஊடக நிறுவனங்கள், மொபைல் எண்களை 10 இலக்கத்தில் இருந்து 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. மொபைல் எண்களுக்கு 11 இலக்கங்கள் என்று டிராய் பரிந்துரை செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால் மொபைல் எண்களுக்கு 11 இலக்கங்களை கொடுக்கலாம் என்ற திட்டத்தை டிராய் நிராகரித்திருக்கிறது.

மற்றபடி லேண்ட் லைன் எண்ணில் இருந்து மொபைல் எண்ணுக்கு அழைக்கும்போது முதலில் பூஜ்யம் சேர்க்க வேண்டும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது. இதுபோன்ற பரிந்துரைகள் இப்போதைய டயலிங் முறையில் மிகச் சிறிய மாற்றம்தான்” என்று விளக்கம் அளித்துள்ளது டிராய்.

எனவே இப்போதைக்கு உங்கள் மொபைல் நம்பர் 10 இலக்கத்தில் இருந்து 11 இலக்கமாக மாறாது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share