பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடாதது உள்ளிட்டவைதான் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக அமைவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயமான தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகளை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த மனு செப்டம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன், பெற்றோர் சம்மதமில்லாமல் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்து கொள்வது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பி ஒரு வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் நேற்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தபோது. ஏற்கனவே திருமணமான நபர்களின் சுயரூபம் மற்றும் உண்மை விபரம் தெரியாமல் இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறியதாக 53,898 புகார்கள் பெறப் பட்டுள்ளன என்று காவல்துறையின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிடாததும், அவர்களுக்கு உரிய அன்பும் கிடைக்காததுமே இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணம் என்று குறிப்பிட்டனர்.
மேலும் இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த விவகாரத்தில் மத்திய சமூகநல துறையைத் தாமாக முன்வந்து பதில் மனுதாரராக இணைத்த நீதிபதிகள், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
**-கவிபிரியா**�,