உலகம் முழுவதையும் பெரும் பயத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் யோகி பாபு நடித்த கொரோனா விழிப்புணர்வு குறும்படம் இன்று(மார்ச் 9) மாலை வெளியாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசாங்கம் சார்பில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்று(மார்ச் 9) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் பேசும்போது, ‘கொரோனா குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளின் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் அங்கன்வாடிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், பெருநிறுவனங்கள், போன்ற முக்கிய இடங்களில் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விமான நிலையங்களில் அதிக பரிசோதனை நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாள் தோறும் 8500 பேர் விமானம் மூலம் வருகிறார்கள், அனைவரையும் ஸ்கிரீனிங் செய்து வருகிறோம்.இதற்காக கூடுதலாக முகக் கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா குறித்த வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கொரோனா பாதிப்பு குறித்து தெளிவான விழிப்புணர்வு வழங்கும் படியான குறும்படம் ஒன்று அரசு தரப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் தெளிவாக விளக்கும் அந்தக் குறும்படத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். கொரோனா தடுப்பு குறித்து எளிய முறையில் அறிந்துகொள்ளும் விதத்திலான இந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த 69 பயணிகளிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது என்றும், அதில் ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர் தற்போது நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,