yயெஸ் வங்கி: 50 ஆயிரம்தான் பணம் எடுக்க முடியும்!

Published On:

| By Balaji

யெஸ் வங்கியில் ரூ.50,000 மட்டுமே வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

வராக்கடன், நிர்வாக சீர்கேடு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டில் மட்டும் 1,500 கோடி இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. யெஸ் வங்கியின் நிர்வாகக் குழுவை ஒரு மாதத்திற்கு முடக்கியுள்ள ரிசர்வ் வங்கி, சீர்திருத்தத்திற்காக மாற்றுக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரஷாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பெரிய வங்கியின் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறையாகும். “எஸ் வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். யாரும் பீதியடையத் தேவையில்லை” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் எஸ் வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்கள் பல கணக்குகள் வைத்திருந்தாலும் அதிகபட்சமாக ரூ.50,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அவசர மருத்துவச் செலவுகள், உயர்கல்வி கட்டணம், திருமண செலவீனங்களுக்காக அதிகபட்சமாக ரூ.5,00,000 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்றும், இதுவரை வழங்கப்பட்ட டிராப்ட் தொகை மற்றும் ஊதியம் தொடர்பானவை முழுமையாக செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share