மார்ச் 5ஆம் தேதி நெருக்கடி காரணமாக, யெஸ் பேங்க்கை இந்திய ரிசர்வ் வங்கி கையகப்படுத்திய நிலையில். அதன் நிறுவனர் ரானா கபூரிடம் விசாரணை மேற்கொண்டனர் அமலாக்கத் துறை அதிகாரிகள். நேற்று (மார்ச் 7) தொடங்கிய விசாரணை 20 மணி நேரம் நீடித்து, இன்று மார்ச் 8 அதிகாலை ரானா கபூரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதியின் கீழ் அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை இரவு மத்திய அரசின் அமலாக்கத் துறை ரானா கபூரின் மும்பை இல்லத்தில் சோதனை நடத்தினர். அவரது இல்லத்தைச் சோதனை செய்த பின்னர் ரானாவை மும்பையிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 20 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தனர். விசாரணைக்கு கபூர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றபோதிலும் ரானா கபூர் மும்பையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், யெஸ் பேங்க் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது கடுமையான புகார்களைக் கூறியிருந்தார்.
வங்கி நெருக்கடியைப் படுதோல்வி என்று அழைத்த ப.சிதம்பரம், “இது பாஜக அரசாங்கம் நாட்டின் நிதி நிறுவனங்களைத் தவறாக நிர்வகிப்பதன் ஒரு பகுதி மட்டுமே என்றார்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), யெஸ் வங்கியில் 49 சதவிகிதப் பங்குகளை வாங்குவதற்கு போர்டு மீட்டிங்கில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய சிதம்பரம், “யெஸ் பேங்க் மீட்பு நடவடிக்கையில் எஸ்பிஐ தானாக முன்வந்ததாக எனக்குத் தோன்றவில்லை. கட்டளைக்கு இணங்கி நடப்பது போலவே தோன்றுகிறது” என்று மத்திய அரசு இதன் பின்னால் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் இன்று அதிகாலை யெஸ் பேங்க் நிறுவனர் ரானா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
**-வேந்தன்**�,”