அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய விருப்பமாக இருப்பது யெல்லோஸ்டோன் பூங்கா. இந்த பூங்கா இயற்கையாக எவ்வளவு அழகை கொண்டிருக்கிறதோ, அவ்வளவு ஆபத்தையும் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பார்க் கவுண்டி வயோமிங் பகுதியில் இருக்கிறது, யெல்லோஸ்டோன் உயிரியல் பூங்கா. உலகின் முதல் தேசிய பூங்காவான இது 1872ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
இதன் மொத்த பரப்பளவு 8,987 சதுர கிலோ மீட்டர். 5 நுழைவு வாயில்களை கொண்டது. 466 கிலோமீட்டர் சாலை வழியாக பூங்காவில் பயணிக்க முடியும். இந்த பூங்கா 80 சதவீத அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது. இந்த பூங்காவில் 15 கிலோ மீட்டர் வரை மட்டுமே நடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. யெல்லோஸ்டோன் குறைந்தபட்சம் 10 ஆயிரம் புவி வெப்ப அம்சங்களை கொண்டுள்ளது. நிலப்பரப்பு அம்சங்கள் மற்றும் உலகின் வெப்ப நீரூற்றுகளில் மூன்றில் 2 பங்கு யெல்லோஸ்டோனில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆபத்துகள் நிறைந்த இந்த பூங்காவில் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. கடா மான்கள், மான்கள், கூர் கொம்புடைய மான்கள், மலை சிங்கங்கள், நீர் நாய்கள், ஓநாய்கள் என பல வகையான விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக எருமைகள் இங்கு அதிக அளவில் வாழ்கின்றன. யெல்லோஸ்டோன் பூங்காவில் 340 அருவிகள் இருக்கின்றன. 300 வெப்ப நீரூற்றுகள் உள்ளன. இங்கிருக்கும் ஓல்ட் பெய்த்புல் என்கிற வெப்ப நீரூற்று ஒவ்வொரு முறையும் 32 ஆயிரம் லிட்டர் வெப்ப நீரை 180 அடிக்கு மேல் கொப்பளிக்கிறது.
பூமிக்கடியில் இருக்கும் ஒரு மாபெரும் எரிமலையின் வாய் பகுதியில் இந்த பூங்கா அமைந்திருக்கிறது. சூப்பர் வல்கனோ என்று இந்த எரிமலையை சொல்கிறார்கள். சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த எரிமலை வெடித்திருக்கிறது. எரிமலையை பற்றி குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் யெல்லோஸ்டோன் பூங்கா வருடத்திற்கு 2 ஆயிரம் முறை நிலநடுக்கத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
.