�அரியலூர், திருச்சி, கரூர்-டெல்டாவை பிரித்தாளும் எடப்பாடி: வெடிக்கும் விவசாயிகள்!

Published On:

| By Balaji

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி, அரியலூர் பகுதிகள் இணைக்கப்படாததற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல் சட்டம் இன்று (பிப்ரவரி 20) சட்டமன்றத்தில் முதல்வரால் தாக்கல் செய்யப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் முழுவதும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளும் வேளாண் மண்டலத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவிரி டெல்டாவை உள்ளடக்கிய திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்கள் இதில் இடம்பெறவில்லை.

இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய ஸ்டாலின், “திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்கள் இதில் இடம்பெறாதது ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகள் எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகள். வயல் மற்றும் பாசனம் நிறைந்த பகுதிகளைத்தான் வேளாண் மண்டல பகுதிகளாக எடுத்துக்கொண்டுள்ளோம். மேலும் திருச்சி, கரூர் போன்றவை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. மேலும், அவை பாதிப்புக்கு உள்ளாகாத பகுதிகள். எனவே அவற்றை சட்ட முன்வடிவில் கொண்டுவர முடியவில்லை” என்று பதிலளித்தார்.

காவிரியானது கொள்ளிடம் உள்பட பல கிளை ஆறுகளாகப் பிரியும் திருச்சிக்கே வேளாண் மண்டலத்தில் இடம் கிடைக்காதது திருச்சி மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவின் தலைவர் ஜி.கே.முரளிதரனை தொடர்புகொண்டு பேசினோம், “தற்போது இயற்றப்பட்டுள்ள காவிரி வேளாண் மண்டல சட்டம் என்பது வெறும் கண் துடைப்புதான். ஏற்கனவே வேதாந்தாவிற்கு 4,000 ஏக்கர் நிலத்தை ஏலம் விட்டுவிட்டார்கள். இந்த சட்டம்கூட ஏற்கனவே இருந்த மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எந்த இடர்பாடும் செய்யவில்லை என்றும், இனி வரும் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்றுதான் சொல்கிறது. ஆனால், நடந்துகொண்டிருக்கும் போராட்டம் இனி வரப்போகும் திட்டங்களுக்காக இல்லை. பழைய திட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

வேளாண் மண்டலத்தில் திருச்சி விடுபட்டிருப்பது காவிரிக்கும் திருச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டம் முழுவதும் திமுக வெற்றிபெற்ற காழ்புணர்ச்சியின் காரணமாகத்தான் வேளாண் மண்டலத்தில் திருச்சி இடம்பெறவில்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. இது திருச்சியை இரண்டாவது தலைநகர் ஆக்கச் சொன்ன எம்.ஜி.ஆருக்கும், ஸ்ரீரங்கத்தை மாவட்டம் ஆக்குவோம் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கும் அதிமுக செய்யும் துரோகம்” என்று சாடினார்.

தொழிற்சாலைகள் காரணமாக திருச்சி இடம்பெறவில்லை என்று முதல்வர் விளக்கியுள்ளாரே என்று நாம் கேட்டோம்… “திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை, திருச்சி பொன்மலை ரயில்பெட்டித் தொழிற்சாலையைத் தவிர திருச்சி மாவட்டத்தில் வேறு எங்காவது தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டட்டும் பார்க்கலாம். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்றும் கூறியிருக்கிறார். இவரது ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்புதான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணங்கள் அளித்தால், அதில் திருச்சி மாவட்டம் முழுவதும் வரும். அதுபோலவே திருச்சி மாவட்டத்தை வேளாண் மண்டலத்தில் இணைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை” என்று வலியுறுத்தினார்.

ஏற்கனவே சிமெண்ட் ஆலைகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், வேளாண் மண்டலத்தில் அரியலூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டது அப்பகுதி விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் இரா.உலகநாதன், “வறண்ட மாவட்டம் என்று அறியப்படும் அரியலூரில் கொள்ளிட பாசன வசதி பெறும் திருமானூர், தா.பழூர் ஆகிய ஒன்றியங்கள் காவிரி டெல்டா பகுதிக்குள் வருகின்றன. இங்கு பொன்னாறு மற்றும் புள்ளம்பாடி ஆறுகள் மூலம் சுமார் 15,000 ஏக்கர்களில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

மேலும், விவசாயத்தை பாதிக்கும் வகையில் ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள உதயநத்தம், பூவாய்குளம், குருவாலப்பர் கோயில், சோழன் குறிச்சி உள்ளிட்ட 6 இடங்களில் ஓஎன்ஜிசி சொந்தமான ஆழ்துளை கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறோம்.

அதுபோலவே செந்துறை, அரியலூர் ஒன்றியங்களில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான ஆறு சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அளவுக்கு மீறி சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுத்ததனால் நிலத்தடி நீர் மட்டம் என்பது அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதன் தாக்கம் அருகிலுள்ள தா.பழூர், திருமானூர் டெல்டா பகுதிகள் வரை எதிரொலித்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் சரியான விவசாய வேலைகள் கிடைக்காததால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பனியன் நிறுவனங்களில் குடும்பத்தோடு தங்கி பணியாற்றிவருகின்றனர்” என்று தெரிவித்தவர்,

“இந்த நிலையில் வேளாண் மண்டல சட்டம் என்பது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது. காவிரி டெல்டா பகுதியின் ஒரு கண்ணுக்கு வெண்ணையையும், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் தருவது ஏற்புடையதல்ல. ஆகவே விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் வகையிலும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளே வருவதை தடுக்கும் வகையிலும் அரியலூர் மாவட்டம் முழுவதையும் வேளாண் மண்டலத்துக்குள் இணைக்கவில்லை என்றாலும் தா.பழூர், திருமானூர் பகுதிகளையாவது இணைக்க வேண்டும். இல்லையெனில் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஒன்றுதிரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தா.பழூர் ஒன்றிய திமுக செயலாளர் க.சொ.கண்ணன் பேசும்போது, “தா.பழூர், திருமானூர் ஒன்றியங்களும் டெல்டா பகுதிதான். வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பு வெளியானபோது தா.பழூர் பகுதியிலுள்ள அதிமுகவினரும், பாமகவினரும் அதனை வெடிவெடித்துக் கொண்டாடினர். அவர்களைப் போலவே வேளாண் மண்டல அறிவிப்பில் எங்களது பகுதி இடம்பெறும் என்று ஆவலோடு எதிர்பார்த்தோம். ஆனால், அரியலூர் மாவட்டமே இடம்பெறாதது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அரியலூர் மாவட்டத்தையும் வேளாண் மண்டலத்தில் இணைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வேளாண் மண்டலத்தில் இணைக்கக் கோரி திருச்சி, அரியலூர், கரூர் மாவட்ட விவசாயிகள் போராட்டத்திற்கும் தயராகிவிட்டனர்.

**த.எழிலரசன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share