குறைபாடுகள் உள்ளவர்கள் பலவீனமானவர்கள் அல்ல: மாளவிகா ஐயர்

public

குண்டு வெடிப்பில் கைகளை இழந்தாலும், தனது விடாமுயற்சியால் உலக அளவில் புகழ் பெற்ற மாளவிகா ஐயர் இன்று (மார்ச் 8) பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தார்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கங்களை சாதனைமிக்க 7 பெண்களிடம் நிர்வகிக்க ஒப்படைத்தார். அந்த வகையில் முதலாவதாகத் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகந்தாஸ் பிரதமரின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தார். புட் பேங்க் இந்தியா அமைப்பை நடத்தி வரும் சினேகா, ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகிறார். இன்று மோடி ட்விட்டர் கணக்கு மூலம் இளைய சமுதாயத்தினர், வீடற்றவர்கள் மற்றும் சாலை ஓரங்களில் இருப்பவர்களும் பசி ஆறுவதற்கு முன்வர வேண்டும் என்று ஊக்கமளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து மாளவிகா ஐயர், குண்டு வெடிப்பில் கைகளை இழந்தாலும் தைரியத்துடன் வாழ்க்கையின் போராட்டங்களைக் கையாண்டது குறித்துத் தெரிவித்திருந்தார். இவர் பிறந்தது கும்பகோணம் என்றாலும் பள்ளிப் பருவ காலங்களில் ராஜஸ்தானில் வசித்து வந்துள்ளார். தனது 13 வயதில் பிகேனர் மாவட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் மாளவிகா ஐயர் இரண்டு கைகளையும் இழந்தார். கால்களில் பெரும் காயங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஒன்றரை வருடம் எதிலும் கவனம் செலுத்தாமல் வீட்டிலேயே ஓய்விலிருந்தார்.

இதன்பின், தனக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துப் படிக்கத் தொடங்கினார். மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்றார். தற்போது பி.ஹெச்டி முடித்துள்ளார். பெண்களுக்காகப் பல சேவைகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த மாளவிகா, நம் வாழ்க்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் வாழ்க்கையை நோக்கிய நமது அணுகுமுறையை நாம் நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். நாளின் முடிவில், நம்முடைய சவால்களை நாம் எவ்வாறு கடந்தோம் என்பதுதான் முக்கியமானது. வரம்புகளை மறந்து, நம்பிக்கையுடன் கடக்க வேண்டும்.

குறைபாடுகள் உள்ளவர்களைப் பலவீனமானவர்களாகவும் சார்புடையவர்களாகவும் காண்பிப்பதற்குப் பதிலாக அவர்களை முன்மாதிரியாகக் காட்ட வேண்டும். இயலாமையை இல்லாமல் ஆக்கும் போரில் அணுகுமுறை என்பது பாதி பங்கு வகிக்கிறது. இதனால் தான் மகளிர் தினமான இன்று எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளப் பிரதமர் மோடி என்னைத் தேர்வு செய்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் குறித்த நீண்டகால மூட நம்பிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்து சரியான பாதையில் இந்தியா பயணிப்பதாக நம்புகிறேன் என்று மோடியின் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் மாளவிகா ஐயர்.

பெண்களுக்காகச் சிறந்த சேவையாற்றியதற்கு மாளவிகா ஐயருக்கு 2018ல் நாரி சக்தி புரஷ்கார் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *