yஹைட்ரோ கார்பன் – நில அதிர்வு ஏற்படும் அபாயம்!

Published On:

| By Balaji

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால் நில அதிர்வு அபாயம் ஏற்படும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்குப் ஓஎன்ஜிசி, கெயில், பிபிஆர்எல், வேதாந்தா, உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் தமிழகத்தில் இரண்டு இடங்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்துக்குக் காவிரி டெல்டா பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தற்போது இன்று (அக்டோபர் 31) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இங்கிலாந்தின் லிட்டில் பிளம்ப்டன் பகுதியில் பாறை எரிவாயுத் திட்டங்களை செயல்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தியதுடன், நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடர்ந்தனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் பிளம்ப்டன் பகுதியில் பாறை எரிவாயு எடுப்பதற்காகப் பூமியை துளையிடும் பணிகள் தொடங்கின. அதன்பின் கடந்த ஐந்து நாட்களில் அப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் கடந்த 26ஆம் தேதி வெள்ளிக் கிழமையும், அதன்பின்னர் 27ஆம் தேதி சனிக்கிழமையும் தலா 0.80 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 29ஆம் தேதி திங்கட்கிழமை 1.10 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து அங்கு துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன “ என்று குறிப்பிட்டுள்ளார்,

“1.10 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்பது உண்மை தான். ஆனால், அதிக இடங்களில் துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் போது நிலநடுக்கத்தின் வீரியம் அதிகரிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இங்கிலாந்தில் இந்த அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில் 2016ஆம் ஆண்டில் கனடாவில் இதைவிட அதிக சக்தி கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்குப் பாறை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டது” என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

“இதையெல்லாம் உணராமல் காவிரி பாசன மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தைக் கொண்டு நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களிலும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்துக்கு கடலில் 170 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உயர்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலேயே இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் நிலையில், பழங்காலத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நினைத்தாலே மிகவும் அச்சமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

.“காவிரி பாசன மாவட்ட விவசாயிகளில் ஒருவர் கூட அத்திட்டத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, அனைத்து மக்களுமே ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share