fசவரக்கத்தி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்வாதிஸ்டா தற்போது ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்துவருகிறார்.
தமிழ் சினிமாவில் முன் எப்போதையும் விட தற்போது முன்னணி நாயகிகள் பலரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். கதாநாயகர்களின் சம்பளம் படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டைவிட அதிகமாக இருப்பதால் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு படங்களைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் விருப்பம் காட்டுகின்றனர். முன்னணி நாயகிகள் மட்டுமல்லாமல் இளம் நாயகிகளும் தற்போது கதையின் மையக் கதாபாத்திரமாக வலம் வருகின்றனர்.
சுசி கணேசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ராம். இவர் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் ஸ்வாதிஸ்டா கதாநாயகியாக நடிக்கிறார். திருப்பூரில் உள்ள ஆலை ஒன்றில் பணிபுரிபவராக ஸ்வாதிஸ்டா நடிக்கிறார். கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களின் பிரச்சினை குறித்து இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.
இதன் படப்பிடிப்பு, டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டன. விடுபட்ட சில ஷாட்டுகளுக்கான படப்பிடிப்பு மட்டும் நடைபெறவுள்ளது.
குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கும் ஜடா படத்திலும் ஸ்வாதிஸ்டா கதாநாயகியாக நடிக்கிறார். ஹவுஸிங் போர்டு பகுதியில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக ஸ்வாதிஸ்டா நடிக்கிறார். கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராயபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.�,