yவெள்ளத்தில் தத்தளிக்கும் ஜப்பான்: 200 பேர் பலி!

Published On:

| By Balaji

ஜப்பானில் கனமழை பெய்து வருவதால், ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

ஜப்பானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் இருந்து வரும் வெள்ளம், குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை, 200 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேரைக் காணவில்லை. இதுமட்டுமில்லாமல், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், மக்கள் வீட்டின் மேற்கூரையில் தங்கியிருக்கின்றனர். மக்களை மீட்கும் பணியில் 72 ஆயிரம் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவினால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன, இதனால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 86 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை மிக மோசமாக இருப்பதால் ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். பாதிக்கப்பட்டபகுதிகளை பார்வையிட்ட அவர், நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு எங்களால் முடிந்த சிறந்த சேவையை வழங்கி வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் 71,000 தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் தெரிவித்ததாக, உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிலர் வீடுகளை இழந்து சிரமப்படுகின்றனர், சிலர் வீடுகளுக்குள் வெள்ளம் வந்ததாலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும் சிரமப்படுகின்றனர். இந்த பேரழிவிலிருந்து மீள்வதற்கு கால தாமதமாகும். ஏற்கனவே, நிலைமை மோசமாக இருக்கின்ற நிலையில், இன்னும் அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டும் மழையினால் சேதம் ஏற்பட்டது. ஆனால், இந்தாண்டு மிக அதிகளவிலான சேதத்தை மேற்கொள்கிறோம். பேரழிவு மேலாண்மை கொள்கை விதிகளை மறுசீராய்வு செய்ய வேண்டும் என செய்தித் தொடர்பாளர் யோஷிஹைட் சுகா கூறியுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share