yவிஜய்யைத் தொடர்ந்து விஷாலுக்கும் எதிர்ப்பு!

Published On:

| By Balaji

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் அயோக்யா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸும், பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸும் மது குடித்தல், புகை பிடித்தலுக்கு எதிராகக் கடந்த பல வருடங்களாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, போதைப் பொருட்களுக்கு எதிராக நிறைய விஷயங்களைச் செய்தார்.

சினிமாவைப் பார்த்துத்தான் இளைஞர்கள் புகை பிடித்தலுக்கும் மது குடித்தலுக்கும் அடிமையாகிறார்கள் எனவும் முன்னணி நடிகர்கள் படங்களில் அவ்வாறு நடிக்கக் கூடாது எனவும் இருவருமே குரல் கொடுத்துவருகின்றனர். சம்பந்தப்பட்ட நடிகர்களிடமும் கோரிக்கையும் வைத்துவருகின்றனர்.

சமீபத்தில்கூட ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது, அதில் விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதற்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த போஸ்டர் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், படத்தில் அதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன.

இந்நிலையில், விஷால் நடித்துவரும் ‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நவம்பர் 19ஆம் தேதி மாலை வெளியானது. அதில், போலீஸ் ஜீப்பின் மீது அமர்ந்தபடி, கையில் பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளார் விஷால். இதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்கப் பொதுச் செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்.

‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில், புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையைத் தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சண்டக்கோழி-2 திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அயோக்யா. இத்திரைப்படத்தினை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த வெங்கட் மோகன் இயக்குகிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் , காஜல் அகர்வால் நடித்து வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் விஷாலுடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share