yவாக்கிங் சென்று வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின்

Published On:

| By Balaji

கிருஷ்ணகிரியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் நாள்தோறும் எந்த ஊரில் இரவு தங்குகிறாரோ, அதே பகுதியில் காலையில் நடைப்பயிற்சி செய்து வருகிறார். ஒவ்வொரு ஊரிலும் நடைப்பயிற்சியின்போது மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் உரையாடுகிறார். தேநீர் அருந்துகிறார். செல்பி எடுத்துக்கொள்கிறார். இதற்கு ஒவ்வொரு பகுதியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நேற்று (மார்ச் 30) ஒசூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யா ஆகிய இருவரையும் ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து இரவு அங்கேயே தங்கிய ஸ்டாலின் இன்று காலையில் கிருஷ்ணகிரி நகரில் உள்ள உழவர் சந்தை, கடை வீதிப் பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். உழவர் சந்தைக்குள் சென்ற ஸ்டாலின் அங்கிருந்த வியாபாரிகளிடம் கைகுலுக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கிருந்த தேநீர்க்கடைக்கு சென்ற ஸ்டாலின் வெளியிலிருந்த இருக்கையில் அமர்ந்து குழந்தைகளுடனும், பொதுமக்களுடனும் பேசிக்கொண்டே தேநீர் குடித்தார்.

இளைஞர்கள் பலர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகேயுள்ள ஆனந்த் தியேட்டர் சாலை, ஸ்டேட் பாங்க் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

**திமுக கூட்டணியைச் சாடிய எடப்பாடி பழனிசாமி**

ஒவ்வொரு பிரச்சாரத்திலும் மத்திய, மாநில அரசுகளை கடுமையாகச் சாடி பேசி வருகிறார் முக.ஸ்டாலின். இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், அதிமுக கூட்டணியே மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கூட்டணி என்றும் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாழை.சரவணனுக்கு ஆதரவாக வேதாரண்யத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தபோது, “தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறந்து விளங்குகின்றன. சட்டம், ஒழுங்கை பேணிக் காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை இதுவரையில் நிறைவேற்றியதே இல்லை” என்று பேசினார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share