பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு நேற்று முதல் முறையாக நேரலையில் செய்தியாளர்களை சந்தித்ததை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (மே 17) மாலை 6 மணியோடு நிறைவடைந்த நிலையில், மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். நேரலையில் மோடியும், அமித்ஷாவும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேரலையில் வந்தார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவும் அப்போது உடனிருந்தார். மோடியும், ராகுல் காந்தியும் ஒரே நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த நேரலையை நாடே உற்று நோக்கியது.
பிரதமராக மோடி முதன்முதலில் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பை நேரலையில் அப்போதே ராகுல் காந்தி விமர்சித்தார். ”இது முன்னெப்போதும் இல்லாத நிகழ்வு. ரஃபேல் விவகாரத்தில் என்னுடன் விவாதிக்க ஏன் மோடி தயாராக இல்லை என்று மோடியிடம் கேளுங்கள். என்னுடன் விவாதிக்க ஏன் தயாராக இல்லை என்று பதில் சொல்லுங்கள் மோடி” என்றார். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, “மோடி என்ன பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதே இல்லை. மோடி என்ன செய்ய சொல்கிறாரோ அதை செய்கிறது. தேர்தல் அட்டவணையே மோடி பிரச்சாரத்துக்கு ஏற்ற வகையில்தான் போடப்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.
பாஜக மிகப்பெரிய பணபலத்துடன் இருப்பதாகக் கூறிய அவர், “நரேந்திர மோடியிடமும், பாஜகவிடமும் கணக்கில்லாத அளவில் பணம் இருக்கிறது. ஆனால் எங்கள் பக்கம் உண்மை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக சிறப்பாகச் செயல்பட்டோம். பாஜக ஆட்சியின் தோல்விகளைக் குறிப்பாக வேலையின்மை, வேளாண் நெருக்கடி போன்றவற்றை மக்களிடம் வெளிக்காட்டியுள்ளோம். பாஜகவின் எல்லா கதவுகளையும் வெற்றிகரமாக அடைத்துள்ளோம். 90 விழுக்காடு கதவுகளை நாங்கள் அடைத்தோம். 10 விழுக்காடு கதவுகளை மோடியே அடைத்துக்கொண்டார். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தியுள்ளோம்” என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று ராகுல் பதிலளித்தார். 300 இடங்களுக்கு மேல் வெல்வோம் என பாஜக கூறுகிறது எனக் கேட்டதற்கு, “மே 23ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்போது அது தெரியும். மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியின் அனுபவத்தைக் கொண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும்” என்றார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு பிரதமர் நேரலையில் செய்தியாளர்களைச் சந்தித்ததற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி, ”அடுத்த முறை 2 கேள்விகளுக்காவது மோடி பதிலளிக்க அமித்ஷா அனுமதிப்பார்” என்று விமர்சித்துள்ளார். மோடியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, தலைவர்தான் எங்களுக்கு எல்லாம் என்று கூறி அமித்ஷாவை மோடி பதிலளிக்கச் செய்ததை விமர்சிக்கும் விதமாக ராகுல் இப்பதிவை இட்டிருந்தார். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை அளிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், முடிவுகள் எதிர்மறையாக இருக்கும்பட்சத்தில் அதற்கும் அமித்ஷாவையே பொறுப்பாக்கும் விதமாகவே எங்களுக்கு எல்லாமே தலைவர்தான் என்று மோடி கூறியிருக்கலாம் என பாஜக வட்டாரங்களிலேயே பேசப்படுகிறது. அதனால்தான் அவர் செய்தியாளர் சந்திப்பில் தனியாகப் பங்கேற்கவில்லை என்றும் பேசப்படுகிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
.
�,”