�
மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களிடமிருந்து மலையாளத் திரைத்துறை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
“வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இந்த நிலை இல்லை” என்று பார்வதி மும்பையில் நடைபெற்றுவரும் திரைப்பட விழாவில் (MAMI Film Festival) நேற்று கூறியுள்ளார்.
“அவர்களுடைய குரல் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. இது பாராட்டத்தக்க விஷயம். மற்ற இடங்களில் பெரும் அமைதியே நிலவுகிறது” என்று கூறினார்.
குல்ஷன் குமாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருந்த மொகல் திரைப்படத்தை சுபாஷ் கபூர் இயக்கிவந்தார். இவர் மேல் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் ஆமீர் கான் இந்தப் படத்திலிருந்து விலகினார். சஜித் கான் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் அக்ஷய் குமார் ஹவுஸ்ஃபுல் 4 படத்திலிருந்து விலகினார். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை அங்குள்ள தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முடிவெடுத்துள்ளதைப் பார்வதி வரவேற்றுப் பேசியுள்ளார்.
அதே நேரத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘விமென்ஸ் சினிமா கலெக்டிவ்’ போன்ற அமைப்பு பாலிவுட்டிலும் தொடங்கப்பட வேண்டும் என்று பார்வதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.�,