ஏற்கனவே இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்ஷே அரசு இருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 23) மீண்டும் கூடியது நாடாளுமன்றம். இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தெரிவுக் குழு வாக்கெடுப்பிலும் ராஜபக்ஷே அரசு தோற்றது.
இன்று காலை 10.30க்கு நாடாளுமன்றம் கூடிய நிலையில் ஒவ்வொரு உறுப்பினரையும் கடும் சோதனைக்குப் பின்னரே மன்றத்துக்குள் அனுமதித்தனர். நாடாளுமன்ற தெரிவுக் குழுவை ஐக்கிய தேசியக் கூட்டணி, சுதந்திரா கூட்டணி என இரு தரப்பில் இருந்தும் சபாநாயகர் நியமித்தார்.
ராஜபக்ஷே கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு மொத்தம் 5 உறுப்பினர்கள், ரணில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு 5 உறுப்பினர்கள், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு ஒரு உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு உறுப்பினர் என்று நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை இன்று அறிவித்தார் சபாநாயகர் கரு ஜெயசூர்யா.
ஆனால் இந்த ஒதுக்கீட்டை ராஜபக்ஷே கூட்டணி சார்பில் கடுமையாக எதிர்த்தனர். ஆளுங்கட்சி என்பதால் தங்களுக்கு அதிக உறுப்பினர்கள் வேண்டும் என்றனர். அப்போது சபாநாயகர், “நீங்கள் இன்னும் பெரும்பான்மையை நிரூபிக்கவே இல்லை. மேலும் இப்போது அரசு என்ற ஒன்றே இல்லை” என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தின் மீது மின்னணு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர். தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிந்ததால், ‘அதிக உறுப்பினர்கள் வேண்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து ராஜபக்ஷே அணியினர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
’ஆளுங்கட்சி என்று சொல்கிறார்கள், அவர்களே வெளிநடப்பு செய்கிறார்கள். இதில் இருந்தே தெரியவில்லையா, யார் ஆளுங்கட்சி என்று?’ என்று ரணில் தரப்பினர் கோஷம் எழுப்பினார்கள்.
மின்னணு வாக்கெடுப்பில் சம்பந்தன் போன்றவர்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் குரல் மூலம் வாக்களித்தனர். முடிவில் தெரிவுக்குழு நியமனத்துக்கு ஆதரவாக அதாவது ராஜபக்ஷே அணியினருக்கு எதிராக 121 வாக்குகள் பதிவாகின. இதையடுத்து சபையை 27 ஆம்தேதிக்கு ஒத்தி வைத்தார் சபநாயகர்.
குரல் வழி வாக்கெடுப்பில் ஏற்கனவே இருமுறை தோல்வி கண்ட ராஜபக்ஷே இப்போது மின்னணு வாக்குப் பதிவு முறையிலும் மூன்றாவது முறையாக தோல்வி கண்டார்.�,