பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது அரசு தேர்வுத் துறை.
தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த 1ஆம் தேதியன்று தொடங்கியது. இத்தேர்வு மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதுகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவடையச் சில நாட்களே உள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (மார்ச் 12) இதுகுறித்து அரசு தேர்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மாணவர்களின் விடைத்தாள்கள் அந்தந்த தேர்வு மையங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல அளவில் முகாம் அலுவலர்கள் வரும் 15ஆம் தேதி பணியைத் தொடங்க வேண்டும் எனவும், விடைத்தாள் திருத்தும் மையத்தின் அதிகாரிகள் மார்ச் 26ஆம் தேதி பணியைத் தொடங்க வேண்டும் எனவும் அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
“தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்கள் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து தொடங்குவார்கள். இதையடுத்து, உதவி விடைத்தாள் திருத்துபவர்கள் மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பணியில் ஈடுபடுவார்கள். இது போன்று பிற பாடங்களுக்கான விடைத்தாள்களை வரும் 29ஆம் தேதி முதல் முதன்மை விடைத்தாள் திருத்துபவர்களும், வரும் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை உதவி விடைத்தாள் திருத்துபவர்களும் திருத்தம் மேற்கொள்வார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டதால், விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.�,