டெல்லி பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் அளித்துச் சேர்ந்து அங்கு நடந்த மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற அன்கிவ் பைசோயா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என டெல்லி போலீசார் நேற்று (நவம்பர் 21) தெரிவித்துள்ளனர்.
அன்கிவ் என்ற மாணவர், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் உறுப்பினர். இவர் தமிழகத்திலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்ததாக ஒரு போலிச் சான்றிதழைத் தயாரித்து அதை வைத்து டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு நடந்த மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் இவருடைய கல்வித் தகுதி குறித்து சந்தேகங்கள் எழுந்தன. இதனால் திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளரிடம் அன்கிவ்வின் சான்றிதழ் அனுப்பப்பட்டு அது உண்மையானதுதானா என்று விளக்கம் கேட்கப்பட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளரால் அந்தச் சான்றிதழ் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏபிவிபி அமைப்பானது அன்கிவ்வை ஏபிவிபியின் சகல பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது.
இந்த நிலையில் அன்கிவ் மீது பல்கலைக்கழகத்தை ஏமாற்றி போலிச் சான்றிதழ் அளித்ததற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அன்கிவ்விடம் மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பானது தங்களது அமைப்பு அன்கிவ் ஒரு மோசடிப் பேர்வழி என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தது. அது உண்மையாகி விட்டது. இது எங்களது அமைப்புக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று தெரிவித்துள்ளது.�,