ஒன்றிணைந்த அதிமுக நடத்திய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, டெல்லி தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணியின் எம்.பி.க்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஒன்றிணைந்த அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கடந்த 12 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது, பொதுக்குழுவில்,’நியமனப் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து, தினகரன் அறிவிப்புகள் செல்லாது, இனி அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய தினகரன், அது பொதுக்குழுவே அல்ல, வெறும் கூட்டம்” என்று கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளனர். அதில் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் நீக்கம் செல்லாது என்று தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதியிடம், தினகரன் அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், செங்குட்டுவன் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா சத்யானந்த்,’எங்களுக்கு வந்த அழைப்பிதழில் யாருடைய கையெழுத்தும் இல்லை. அதை தேர்தல் ஆணையத்தில் தெளிவாகக் கூறியுள்ளோம். யாருடைய கையெழுத்தும் இல்லாமல் கூட்டப்பட்டது பொதுக்குழுவே அல்ல. எனவே பொதுக்குழு நடத்தியது செல்லாது என்று அறிவிக்கக் கோரியுள்ளோம். தேர்தல் ஆணையத்தில் 7 லட்சம் பிராமண பாத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிராமண பத்திரங்களை திரும்பப் பெற யாருக்கும் அதிகாரமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக இரட்டை இலை சின்னம், அதிமுக பெயர் தொடர்பாக தங்கள் தரப்பிடம் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,”