yநீட் தேர்வு ரத்து: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

Published On:

| By Balaji

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் வரும் 11ஆம் தேதி ஆரம்பித்து ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவிடாமல் செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயலாற்றிவருகிறது.

தேர்தல் அறிக்கைக்காக காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பல்வேறு தரப்பு மக்களிடமும் ஆன்லைன் மூலமாகவும் கேட்டு தயாரித்தது.

இதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையாக ஆண்டுக்கு ரூ. ரூ.72 ஆயிரம் செலுத்தப்படும்” என்று அறிவித்தார். இதனால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அறிவிப்புகள் குறித்த எதிர்ப்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 2) அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலில் பேசிய ப.சிதம்பரம், “லட்சக்கணக்கானவர்களின் கருத்துக்களை கேட்டு தயாரிக்கப்பட்டுள்ளது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும். உளவு அமைப்புகளில் அரசியல் தலையீடு இருக்காது.இறக்குமதிக்கு ஜிஎஸ்டி கிடையாது. வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை தரப்படும்” என்று கூறினார்.

இறுதியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி, “5 முக்கிய அம்சங்களைக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருவாய் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கத் திட்டங்கள் கொண்டுவரப்படும். 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் கல்விக்கு ஒதுக்கப்படும். கிராம ஊராட்சிகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். 2030 ஆம் ஆண்டிற்குள் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எனவே நீட் ரத்து செய்யப்பட்டு, அதற்கு இணையாக மாநில அளவில் ஒரு தேர்வு நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு ரத்து அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share