வரும் காலங்களில் முதல்வராக வருவதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை என்ற நிலை வந்து விடும். ஒரு நல்லவன் தன் வாழ்நாளை தியாகம் செய்து, நாட்டில் நல்லாட்சி புரிந்து, சகலவித நன்மைகளையும் நம் மீது மழை போல் பொழிய வேண்டும் என்று ஆசைபடுவது அபத்தம். அது போன்ற ஆடம்பர ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காலத்தை நாம் கடந்து விட்டோம்.
எவ்வளவு முட்டாள்தனமும், அதிகார போதையும், ஊழலும் கொண்ட மனிதர் நமக்கு முதல்வராகவோ, பிரதமராகவோ வந்தாலும், அவரை மீறியும் தேசம் நேர்க்கோட்டில் இயங்குவதற்குத் தேவையான அமைப்பு நமக்குத் தேவை. மாபெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவை உணர்வெழுச்சியில் மட்டுமே முடிவெடுத்து ஆள்வது (மோடி செய்வது போல) சரியல்ல. தனி மனிதன் மீதான அதீத நம்பிக்கையெல்லாம் இனிவரும் காலங்களில் ஆகாது. அதன் கடைசி உதாரணமாக ஜெ. இருந்தது போதும்.
மிகவும் திடமான, தனி மனிதத் தலைமைக்கு எளிதில் கட்டுப்படாத, அதே சமயம் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு சார்ந்த பணிகளில் தானாகவும் சரியாகவும் இயங்கக் கூடிய அதிகார அமைப்பு நமக்குத் தேவை. தலைவர்கள் மட்டுமல்லாமல் நுண் மின் சாதனங்கள், உள்ளூர் குழு அமைப்புகள் போன்றவற்றை அங்கமாகக் கொண்ட புதிய அரசு அமைப்பு அதிக நன்மை தரக்கூடியது.
ராணுவம் தவிர அனைத்து அதிகாரப் பணிகளில் இருந்தும் அரசுகள் தங்களை விலக்கிக் கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். இவையெல்லாம் விவாதிக்கப்பட ஏற்ற தருணத்தை உருவாக்கித் தர அம்மாவும், சின்னமாவும், மோடியும் துணை நின்றார்கள் என்று வரலாறு சொல்லட்டும்.
***
மேலே கண்ட விஷயத்தை என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் முகநூலில் எழுதியிருக்கிறார். வித்தியாசமான சிந்தனைதான். ஆனாலும் நம் நாட்டின் அடிப்படையான பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார். அவரது பதிவில் ஆட்சியாளர்கள் அல்லது அரசியல்வாதிகளைப் பற்றிய அவரது அவநம்பிக்கை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியா முழுவதுமே மக்களுக்கு அரசியல்வாதிகள் குறித்த கருத்து அதுதான். ஆனால் நாம் அனைவருமே கவனிக்கத் தவறும் பிரச்சினை என்னவென்றால், நம் நாட்டுப் பிரஜைகளின் மனோபாவம். சோம்பேறித்தனம், அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுவது, ஒழுங்கின்மை போன்ற தீமைகளிலிருந்து இந்தியர்கள் எப்போது விடுபடுகிறார்களோ அப்போதுதான் இந்த நாட்டுக்கு விடிவு காலம் ஏற்படும். நாம் அறத்தை இழந்து விட்டோம். தர்மத்தை இழந்து விட்டோம். மதிப்பீடுகளை இழந்து விட்டோம். இவற்றையெல்லாம் திரும்ப அடைவதற்கான பாதையில் முதல் அடியைக் கூட வைக்காமல் நம்முடைய எதிர்காலம் பற்றிப் பேசுவதற்கே இப்போது வாய்ப்பு இல்லை.
***
சென்னையில் உலகத் திரைப்பட விழா துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. விழாவை எத்தனை மோசமாக நடத்த முடியுமோ அத்தனை மோசமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஐநாக்ஸ் போன்ற மிகச் சிறிய திரையரங்குகளில் முக்கியமான படங்கள் திரையிடப்படுகின்றன. அதனால் படம் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே க்யூவில் போய் நிற்க வேண்டியிருக்கிறது. ஒரு நாளில் நான்கு படங்கள் பார்க்கிறோம் என்றால் நான்கு படங்களுக்கும் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டியிருக்கிறது. இனிமேல் மளிகைக் கடை, டீக்கடை, மருத்துவமனை, பப்புகள், கோவில் போன்ற இடங்களில் எல்லாம் கூட திறப்பதற்கு முன்பு தேசிய கீதம் பாடுவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பணியாதவர்களை தேசத் துரோகக் குற்றம் சாட்டி பத்து வருடம் சிறையில் தள்ள வேண்டும் என்றும் மோடி ஜியிடம் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Mohamed Diab இயக்கிய Clash என்ற எகிப்திய படம் பார்த்தேன். ’அவ்வளவுதான்; இந்த ஒரு படமே போதும்; வேறு எந்தப் படமும் இந்தத் திரைப்பட விழாவில் பார்க்கத் தேவையில்லை’ என்ற அளவுக்கான அதிகபட்ச திருப்தியை ஏற்படுத்திய ஒரு படம்.
போலீஸ் வேனுக்குள் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதைத் தடுப்பதற்காக அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சும் காட்சி:
[படத்தின் ட்ரைலரும் இயக்குனரின் சில வார்த்தைகளும்](http://video.aljazeera.com/channels/eng/videos/egyptian-film-clash-opens-in-cannes-festival/4892819864001)
1928-இல் எகிப்தில் துவங்கப்பட்ட ஒரு இஸ்லாமிய (ஸன்னி பிரிவு) கட்சி முஸ்லீம் சகோதரத்துவம். 2011-இல் எகிப்தில் ஏற்பட்ட புரட்சியின் போது அதிபர் முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் நடந்த தேர்தலின் மூலம் பதவிக்கு வந்த முஸ்லீம் சகோதரத்துவத்தின் அதிபர் முகமது மோர்ஸி ஜூலை 2013-இல் நடந்த ராணுவப் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்டார். அந்த ராணுவப் புரட்சிக்கு பெரும் மக்கள் ஆதரவும் இருந்தது. அதே சமயம் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியை ஆதரித்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் இருந்ததால் அச்சமயத்தில் எகிப்தில் உள்நாட்டுக் கலவரமே நடந்தது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு கலவர தினத்தில் ஒரு போலீஸ் வேனில் கலவரக்காரர்கள் சிலர் ஏற்றப்படுகிறார்கள்.
படம் முழுவதும் இந்த சிறிய வேனுக்குள்தான் நடக்கிறது. வேனுக்கு வெளியே ஒரே துப்பாக்கி சப்தம்; வெடிகுண்டுகள் சப்தம்; ராக்கெட் குண்டுகள்; கற்களால் ராணுவத்தினரையும் போலீஸையும் தாக்கும் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த மக்கள்… இதெல்லாம் ஒருசில நிமிடங்கள்தான் காண்பிக்கப்படுகின்றன. மற்றபடி படம் முழுவதும் வேனுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான். யோசித்துப் பாருங்கள். பத்துப் பதினைந்து பேர் அடைக்கப்பட்டுள்ள ஒரு போலீஸ் வேன். அதில்தான் 97 நிமிட படமும் நடக்கிறது. வேனுக்குள் ஏற்றப்பட்டவர்களில் சிலர் முஸ்லீம் சகோதரத்துவத்தின் தீவிர அனுதாபிகள்; சிலர் ராணுவத்தை ஆதரிப்பவர்கள்; சிலர் நடுநிலையாளர்கள்; சிலர் பத்திரிகையாளர்கள். முதல் இரண்டு பிரிவினருக்குள் கடும் சண்டை ஏற்படுகிறது. சண்டையில் எல்லோருமே செத்து விடுவார்கள் போன்ற நிலை வரும் போது போலீஸ் அவர்கள் அனைவரின் மீதும் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறது.
இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் மாற்று சினிமா இயக்குனர்கள் பார்த்தால் தமிழ் சினிமா கொஞ்சம் உருப்படலாம். ஏனென்றால், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத, எந்த நிமிடமும் ராக்கெட் குண்டுகளால் தாக்கப்பட்டு இறந்து விடலாம் என்ற நிலையில் போலீஸ் வேனுக்குள் இருக்கும் சிலரைப் பற்றிய இந்தப் படத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் நிமிடத்துக்கு ஒருமுறை சிரித்துக் கொண்டே இருந்தார்கள். எப்படி இது சாத்தியம்? அதுதான் black humour செய்யும் மேஜிக். வேனுக்குள் வெறும் குண்டு வீச்சு பயம் மட்டும் அல்ல; முஸ்லீல் சகோதரத்துவக் கட்சி அனுதாபிகள் வேனுக்குள் இருப்பவர்களை போலீஸ் என்று நினைத்துக் கொண்டு கற்களை வீசித் தாக்குகிறார்கள். ஆயிரக் கணக்கான மக்கள் கற்களால் தாக்கும் போது ஆகாயத்திலிருந்து கல்மழை பொழிவது போல் தோன்றுகிறது. அதுவும் தவிர, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசுகிறார்கள். அந்தப் புகை வேனுக்குள் வந்தால் எல்லோரும் மூச்சு முட்டியே செத்து விடும் வாய்ப்பு உண்டு. வெக்கை வேறு தாங்க முடியாமல் ஆகிறது. ஆண்கள் சட்டையைக் கழற்றிப் போட்டு விடுகிறார்கள். வேனுக்குள் இருக்கும் ஒரே ஒரு ஜன்னல் வழியாக வரும் காற்றை எல்லோரும் பகிர்ந்து கொள்வதாக எல்லோரும் வட்ட வடிவில் நின்று ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக் கொண்டு அந்தச் சாளரத்தை சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.
கலவரத்தின் போது நெற்றியில் அடிபட்ட ஒருவனும் வேனுக்குள் இருக்கிறான். ரத்தம் வழிந்து கொண்டே இருக்கிறது. அதைத் தடுத்தால்தான் அவன் பிழைப்பான். வேனுக்குள் இருப்பவர்களில் ஒரு பெண் நர்ஸாக இருப்பவள். அவள் அந்தக் காயத்தைத் தொடப் போகும் சமயத்தில் அவன் “ஆ… ஒரு பெண், ஆணை எப்படித் தொடலாம்; நகர்ந்து போ, நகர்ந்து போ” என்று கத்துகிறான். சினிமா அரங்கில் சிரிப்பொலி. இதுதான் ப்ளாக் ஹ்யூமர். படம் முழுவதுமே இப்படித்தான் நகர்கிறது.
மிகத் துயரமான அந்தச் சூழலில் ஒருவனுக்கு சிறுநீர் போக வேண்டும். ட்ரவுசரிலேயே போய் விடுவேன் என்று அலறுகிறான். வேனிலிருந்து அதை போலீஸுக்குச் சொல்கிறார்கள். போலீஸால் அவர்களில் ஒருவரைக் கூட வெளியே விட முடியாது. அதற்குக் காரணம், போலீஸின் பரிதாப நிலை. அது என்னவென்றால், எத்தனை பேர் வேனுக்குள் அடைக்கப்பட்டார்கள், அவர்கள் பெயர் என்ன என்பதையெல்லாம் போலீஸ்காரர்கள் தலைமையகத்துக்குத் தெரிவித்து விட்டார்கள். இப்போது அவர்களில் ஒருத்தனை வெளியே விட்டு, அவன் கலவரக்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி விட்டால் தலைமையகத்துக்கு யார் பதில் சொல்ல முடியும்? இதனால்தான் அந்தப் போலீஸ்காரர்களால் அந்த மனிதன் சிறுநீர் கழிக்க வெளியே அனுமதிக்க முடியவில்லை. இருந்தாலும் அவர்களில் ஒருத்தன் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்கிறான். அதைப் பார்த்து விட்டு சிறுநீர் கழிக்க வேண்டியவன் ”என்ன இது, இவ்வளவு சிறிய துவாரம்தான் இருக்கிறது? இதில் எப்படி என்னால் சிறுநீர் கழிக்க முடியும்? என்று தயங்குகிறான். அவனை அழைத்துக் கொண்டு வேனின் மூலைக்குச் செல்லும் இன்னொருவன் பாட்டிலைக் கொடு, நான் சொல்லிக் கொடுக்கிறேன்” என்று சொல்லி அதைச் செய்தும் காண்பிக்கிறான். இந்தக் காட்சியிலும் அரங்கத்தில் ஒரே சிரிப்பு. இதுதான் ப்ளாக் ஹ்யூமர்.
இன்னொரு துயரமான, வலுவான காட்சி ஒன்று. அடைபட்டுள்ளவர்களில் சிலர் பெண்கள். இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள் என்று ஒரு தவறான பார்வை உண்டு. அது தவறு என்று நிரூபிக்கிறது இந்தப் படம். எப்படி ஒரு ஆணை பெண் தொடக் கூடாது என்ற நடைமுறை இருக்கிறதோ அதே சமூகத்தில்தான் பெண்கள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள்; ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள். அவர்களில் ஒரு பெண் கல்லூரி மாணவி. அவள் தனக்குள் குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். அவள் தந்தை என்ன என்று கேட்கும் போது அவள் பதில் சொல்லத் தயங்குகிறாள். மற்றொரு பெண் அவள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறாள். போலீஸிடம் தகவல் சொல்லப்படுகிறது. அவளையும் ஒரு ஓரத்தில் கழிக்கச் சொல்லுங்கள் என்கிறான் போலீஸ்காரன். உனக்கு சகோதரி, தாய் எல்லாம் இருக்கிறார்களா என்று கத்துகிறார்கள் எல்லோரும். அவன் கண் கலங்குகிறான். எனக்கு வேறு வழியில்லை என்கிறான். வேனில் உள்ள எல்லா ஆண்களும் ஒரு பக்கம் திரும்பிக் கொள்கிறார்கள். அந்தப் பெண் முயற்சி செய்து விட்டு வந்து மீண்டும் அழுகிறாள். அவளால் சிறுநீர் கழிக்க முடியவில்லை.
படத்தின் சிறப்புகளில் ஒன்று, இதை கைக்கேமரா மூலம்தான் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் முகம்மது தியாப்.
படத்தில் நர்ஸாக நடித்திருக்கும் நெல்லி கரிம் அரபி சினிமாவின் மிகப் பிரபலமான நடிகை.
வேனுக்குள் நடக்கும் மற்றொரு சம்பவம்: அடைபட்டிருப்பவர்களில் ஒருவன் பணக்கார வீட்டுப் பையன். DJ-வாக இருப்பவன். அவனிடம் ஒரு அலைபேசி உள்ளது. அதன் மூலம் அவன் வீட்டுக்குப் பேசுகிறான். மந்திரியிடம் சொல்லி என்னை விடுவிக்க முயற்சி செய்யுங்கள் என்கிறான். “என்னது, உன்னை மட்டுமா? எங்களையும் சேர்த்து விடுவிக்கச் சொல்” என்று அவனிடம் கத்துகிறார்கள் எல்லோரும். (தியேட்டரில் சிரிப்பு) அதைச் சொல்வதற்குள் ஃபோன் கீழே விழுந்து உடைந்து விடுகிறது. (மீண்டும் சிரிப்பு) உடைந்த ஃபோனை எடுத்து சேர்த்து மீண்டும் இயங்கச் செய்கிறான் டீஜேயின் நண்பன். இயங்கச் செய்யும்போது அதில் தன்னுடைய சகோதரியோடு இவன் செய்யும் காதல் மெஸேஜ்களைப் பார்த்து விடுகிறான். எனக்கா துரோகம் செய்தாய் என்று கேட்டு டீஜேயைக் கொல்லப் போகிறான். (தியேட்டரில் சிரிப்பு)
2016-இல்தான் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. நான் பார்த்த மறக்க முடியாத உலக சினிமாக்களில் ஒன்று Clash.
[நாடோடியின் நாட்குறிப்புகள் – 1](http://minnambalam.com/k/2016/11/21/1479666613)
[நாடோடியின் நாட்குறிப்புகள் – 2](https://minnambalam.com/k/2016/11/28/1480271437)
[நாடோடியின் நாட்குறிப்புகள் – 3](https://minnambalam.com/k/2016/12/05/1480876216)
[நாடோடியின் நாட்குறிப்புகள் – 4](https://minnambalam.com/k/2016/12/10/1481308229)
[நாடோடியின் நாட்குறிப்புகள் – 5](https://minnambalam.com/k/2016/12/12/1481481041)
[நாடோடியின் நாட்குறிப்புகள் – 6](http://minnambalam.com/k/2016/12/19/1482085811)
[நாடோடியின் நாட்குறிப்புகள் – 7](http://minnambalam.com/k/2016/12/26/1482690657)
[நாடோடியின் நாட்குறிப்புகள் – 8](https://minnambalam.com/k/2017/01/02/1483295425)�,”