சென்ற வாரக் கட்டுரையில் பாளையங்கோட்டை செயின்ட் ஸ்டீஃபன் கல்லூரி என்பதை செயின்ட் சேவியர் என்று மாற்ற வேண்டும். 1978-இலிருந்து 1990 வரை நான் தில்லியில் இருந்தது இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை என்று நினைக்கிறேன். செயின்ட் ஸ்டீஃபன் தில்லியில் உள்ள பிரபலமான கல்லூரி.
“மற்றொரு விஷயம், அன் அல் ஹக். இதைச் சொன்ன அல்ஹலாஜ் பற்றி வேறொரு கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளீர்கள். அதை, இந்தத் தொடரில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கட்டுரையில், அவர் ஏன் கொல்லப்பட்டார் என்று புதிதாகப் படிப்பவர்களுக்குப் புரியாது”என்று நண்பர் ஸ்ரீராம் குறிப்பிட்டார்.
பொதுவாகவே என் கட்டுரைகளில் ஒரு தொடர்ச்சி இருக்கும். அவை, ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு வாசிக்கப்பட வேண்டியவை. ஜார்ஜ் பத்தாயின் எழுத்துகள் பற்றி ரொலான் பார்த் கூறுகிறார்: “பத்தாய் ஒரே ஒரு பிரதியைத்தான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.” அதேபோல் நானும் என் கட்டுரை, கதை, கவிதை எல்லாவற்றிலும் தொடர்ந்து ஒரே பிரதியைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
மேலும், அல்ஹலாஜ் என்று கூகுளில் போட்டு அவரது வாழ்க்கையைப் பற்றிப் படிக்கலாம். நான் ஒரு சிறிய கோடு மட்டுமே போடுகிறேன். அதை வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டியது வாசகர் பொறுப்பு. அல்ஹலாஜ் ஏன் கொல்லப்பட்டார்? ’நானே கடவுள்’ என்று ஒருவர் சொல்வதை ஒரு இஸ்லாமிய மன்னர் அனுமதிப்பாரா? அதுதான் காரணம்.
***
எடுத்த எடுப்பில் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) எழுதிய Ma Mère (’என்னுடைய அம்மா) நாவலைப் படித்தால் ஒருவருக்கு அது வக்கிரம் என்றே தோன்றும். அருவருப்பு உணர்வு ஏற்படும். எனவே பத்தாயின் புனைகதைகளில் நுழைவதற்கு முன்னால் அவர் பற்றி ரொலான் பார்த்தும் (Roland Barthes) சூஸன் சொண்டாகும் (Susan Sontag) என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை வாசித்துக் கொள்ள வேண்டும். அமைப்பியல் வாதத்தின் மூலவர்களாகக் கருதப்படும் ஜாக் லக்கான் (Jacques Lacan), ஜாக் தெரிதா (Jacques Derrida), ரொலான் பார்த், மிஷல் ஃபூக்கோ (Michel Foucault) ஆகிய நால்வருமே ஜார்ஜ் பத்தாயைத் தங்கள் முன்னோடியாகக் காண்கிறார்கள். இவர்களுக்குப் பிறகு ஜான் பொத்ரியார் (Jean Baudrillard) மற்றும் ஜூலியா க்றிஸ்தவா போன்றவர்களும் ஜார்ஜ் பத்தாயிடமிருந்துதான் தங்கள் சிந்தனையைத் தொடங்குகிறார்கள். பத்தாயின் எழுத்துகளைப் பற்றி இப்போது பல புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த இடத்தில் நாம் ஜான் பால் சார்த்தர் பற்றியும் கொஞ்சம் ஒப்பு நோக்க வேண்டும். சார்த்தர் அவரது காலத்தில் ஒரு பாப் ஸ்டார் அளவுக்குக் கொண்டாடப்பட்டவர். என்னுடைய ஆரம்பகால எழுத்தின் ஆதர்சமாக இருந்திருக்கிறார் சார்த்தர். அவரிடமிருந்துதான் என்னுடைய முதல் நாவலையே (எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்) துவங்கினேன். ஆனால், சார்த்தரின் சிந்தனை, புனைகதைகளின் உணர்வுபூர்வமான தளத்திலேயே தேங்கி நின்று விட்டது. அவரது நாடகங்கள், ஒன்றிரண்டு சிறுகதைகள் ஆகியவற்றைத் தவிர அவரது பங்களிப்புக்கு இன்று அர்த்தமில்லாமல் போய் விட்டது. ஆல்பெர் கம்யு அளவுக்குக் கூட சார்த்தரின் பெயர் இன்று விவாதிக்கப்படுவதில்லை. ஆனால், உயிரோடு இருந்தபோது ஜார்ஜ் பத்தாய் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டார். சார்த்தர் போன்றவர்களால் கேலியும் கிண்டலுமாக நிராகரிக்கப்பட்டார். இருபதுகளில் பத்தாய் சர்ரியலிஸ்டுகளை விமர்சித்ததால் அவர்களாலும் தாக்கப்பட்டார். தன் எழுத்துகளை யாருக்குமே தெரியாத புனைபெயர்களில் எழுதினார் பத்தாய். சமயங்களில் அவர் எழுத்துகள் தடையும் செய்யப்பட்டன. எனவே நம்முடைய கலாசாரச் சூழலையும் நம்முடைய அனுபவத்தையும் வைத்து ஜார்ஜ் பத்தாயை எடை போடுவது தவறு.
சமூகவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், இலக்கியம் போன்ற பல துறைகளில் அறிஞராக விளங்கிய ஜார்ஜ் பத்தாயின் (1897 – 1952) முக்கியத்துவம் என்னவென்றால், அவரது சிந்தனை அவரது காலத்தை விட ஒரு நூற்றாண்டு முன்னால் இருந்தது. அதாவது, 2030இல் சொல்ல வேண்டியதை 1930-லேயே சொன்னார் பத்தாய். அதனால்தான் அவரை யாருக்கும் புரியாமல் போய் விட்டது. கருத்துச் சுதந்திரத்தை அதி தீவிரமாகப் பாராட்டக்கூடிய ஃப்ரான்ஸிலேயே ஜார்ஜ் பத்தாய் யாருக்குமே தெரியாத ரகசியப் பெயரில் எழுத வேண்டியிருந்தது. காரணம், அவர் புதினங்கள் ஒழுக்கக் கேடானவையாக (immoral) இருந்தன. 1940களில் எழுதப்பட்ட அவரது புத்தகங்கள் 1990களில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் பத்தாயை தெரிதா, ஃபூக்கோ, ஜூலியா க்றிஸ்தவா, சூஸன் சொண்டாக் ஆகியோரின் துணை கொண்டு வாசித்தால்… இல்லை, அதெல்லாம் கூட வேண்டாம்; பத்தாயின் புனைகதைகளைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய கட்டுரைகளேதான் திறவுகோல்.
**Jacques Derrida**
பத்தாயின் கதைகளைப் படித்தபோது அது எனக்கு ஒருவித mystic அனுபவத்தைக் கொடுத்தன. வேடிக்கை என்னவென்றால், சார்த்தர் பத்தாயை ”mystic” என்று சொல்லியே நிராகரித்தார். சார்த்தரைப் பொறுத்தவரை மிஸ்டிக் என்றால் அர்த்தமற்ற உளறல். ஒரு நாத்திகருக்கு ஒரு ஆன்மிகவாதி எப்படி அர்த்தப்படுவாரோ அதைப் போல. எல்லாவற்றையும் விட ஆச்சரியம், பத்தாயுமே தன்னை ஒரு ‘மிஸ்டிக்’ என்றே சொல்லிக் கொண்டார். அவர் எழுத்துகளில் அடிக்கடி ‘உள்ளார்ந்த அனுபவம்’ என்ற வார்த்தை தென்படுகிறது. பாலியல் அனுபவம் அப்படிப்பட்டதுதான் என்பது பத்தாயின் கருத்து. உதாரணமாக, பத்தாயின் மதாம் எத்வார்தா சிறுகதையை எடுத்துக் கொள்வோம். (இதையும் பத்தாய் யாருமே அறியாத ரகசியப் பெயரில்தான் எழுதினார்.) தெரிதா போன்றவர்களின் சிந்தனையில் பெரும் பாதிப்பை நிகழ்த்திய மற்றொரு ஃப்ரெஞ்ச் தத்துவவாதியும், இலக்கியக் கோட்பாட்டாளருமான Maurice Blanchot இந்தக் கதையைப் பற்றி, ’the most beautiful narrative of our time’ என்று குறிப்பிடுகிறார். அதில் உள்ளார்ந்த அனுபவமும் பாலியல் அனுபவமும் ஒன்றாக இணையும் ஒரு காட்சியைப் பார்ப்போம்:
She was seated, she held one long leg stuck up in the air, to open her crack yet wider she used her fingers to draw the folds of skin apart . .. ‘Why’, I stammered in a subdued tone, ‘why are you doing that?’ ‘You can see for yourself ‘, she said, ‘I’m GOD’.
இதைப் படித்த போது எனக்கு கௌஹாத்தி நகரில் உள்ள காமாக்யா கோயில் ஞாபகம் வந்தது. அந்தக் கோயிலில் யோனியைத்தான் கடவுளாக வழிபடுகிறார்கள். அங்கே சென்று வந்த அனுபவத்தைப் பிறகு சொல்கிறேன்.
இங்கே வேறொரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். நான் இந்தத் தொடரில் ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களை அறிமுகம் செய்யும் வேலையை எடுத்துக் கொள்ளவில்லை. நம் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி ஐரோப்பா கொஞ்சமும் அக்கறையற்று இருக்கும்போது நாம் அவர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் கருத்து. அந்த வகையில் நமக்கு ஐரோப்பாவிலிருந்து மொழிபெயர்ப்பு இறக்குமதி தேவையில்லை. முதலில் நம்மை அவர்கள் மொழிபெயர்த்து வாசிக்கட்டும். இருந்தாலும் இங்கே நான் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் அறிமுகப்படுத்துவதன் காரணம், எனக்கும் அவர்களுக்கும் உள்ள சிந்தனைத் தொடர்பை விளக்குவதற்காகத்தான். மேலும், அவர்களைப் படித்து விட்டு நான் எழுதத் தொடங்கவில்லை. படிக்காமலேயேதான் எழுதினேன். எழுதிக் கொண்டிருக்கும்போதே இந்த ரீதியில் எழுதுபவர்கள் ஃப்ரான்ஸில் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் அந்தத் தொடர்பு மேலும் வலுத்தது. நான் இங்கே குறிப்பிடுவது ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர்களை. சுந்தர ராமசாமி கோஷ்டியினரால் கொண்டாடப்படும் ஆல்பெர் கம்யு வகையறாக்களை அல்ல.
பத்தாய்க்கு மீண்டும் வருவோம். பத்தாயை, அவருடைய பாலியல் எழுத்தை எப்படி மிஸ்டிஸிஸத்துக்குள் அடக்குவது? இரு உடல்களின் சேர்க்கையை அவர் ”ஒருமை” என்கிறார். ஈருடல், ஓருயிர் என்று சொல்வோம் அல்லவா, அதுதான் அவர் சொல்லும் மிஸ்டிக் அனுபவம். இதை அவர் மரணத்தோடு இணைக்கிறார். ஏனென்றால், மரணம்தான் சிருஷ்டியின் விதை. இலக்கியத்தைக் கூட பத்தாய் அப்படித்தான் வரையறுக்கிறார். (பார்க்கவும்: என்னுடைய சிறுகதை ‘உன்னத சங்கீதம்’)
Literature (fiction) took the place of what had formerly been the spiritual life; poetry (the disorder of words) that of real states of trance.
”ஆன்மிகம் இருந்த இடத்தை இலக்கியம் பிடித்துக் கொண்டது; கவிதை என்பது தியானத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டது.”
பத்தாயின் எழுத்தில் இருவித மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று, பாத்திரங்களின் மரணம். இரண்டாவது, எழுத்தாளனின் மரணம். ஆம், பத்தாய் தன் ஒவ்வோர் எழுத்திலும் தன்னையே மறுதலித்துக் கொண்டு செல்கிறார். தன்னுடைய கதையாடலைத் தானே கலைத்துப் போடுகிறார். (நான் எழுதுவது புத்தகம் அல்ல; வாசகருக்கு அது ஒரு சவால்: பத்தாய்). தானே தன்னுடைய பிரதியில் இல்லாமல் போகிறார். அர்த்தத்துக்கு எதிரான எழுத்தை உருவாக்குகிறார். இப்படியாக எழுத்தின் அதிகாரத்தை நொறுக்கி விடுகிறார். இது பத்தாய் பற்றிய தெரிதாவின் ஒரு வாசிப்பு.
***
முதலில் நாம் பத்தாயின் Ma Mère நாவலின் சினிமா வடிவத்தைப் பார்ப்போம். ஃப்ரெஞ்ச், ஆஸ்திரிய, போர்த்துக்கீசிய, ஸ்பானிஷ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பான மா மேர் Christophe Honoréவின் இயக்கத்தில் 2004இல் வெளிவந்தது. க்றிஸ்தோஃப் ஹனோரே ஒரு நாவலாசிரியர், நாடகாசிரியர், சிறுவர்களுக்கான கதாசிரியர் மற்றும் தன்பால் சேர்க்கையாளர். இவரது படங்கள் கான் திரைப்பட விழா உட்பட பல விழாக்களில் பரிசு பெற்றிருக்கின்றன. ஃப்ரெஞ்ச் சினிமாவில் இவர் ஒரு Auteur ஆகக் கருதப்படுகிறார். ‘ஆதர்’ என்பதன் பொருள், ஒரு நூலின் ஆசிரியரைப் போல ஒரு சினிமாவின் சிருஷ்டிகர்த்தா. அதாவது, புதிய சினிமா மொழியை உருவாக்குபவர்களை ஃப்ரெஞ்சில் ‘ஆதர்’ என்று குறிப்பது வழக்கம். இந்த விவரம் மிக முக்கியம். இல்லாவிட்டால் ’மா மேர்’ படத்தை ஒரு போர்னோ படமாக நினைத்து விட அதிக வாய்ப்பு இருக்கிறது. போர்னோ படங்களின் நோக்கம் அதன் பார்வையாளர்களை பாலியல் எழுச்சி கொள்ளச் செய்வது என்பது நமக்குத் தெரியும். ஆனால் மா மேர் மிக நேரடியான பாலுறவுக் காட்சிகளை க்ளோஸப்பிலும் விலகியும் காண்பித்தாலும் நாம் பாலியல் எழுச்சி அடைவதில்லை. காரணம் என்ன என்பதை ஜார்ஜ் பத்தாய் பாலியல் பற்றி எழுதிய ஒரு நூலை முன் வைத்துப் பிறகு பேசுவோம். க்றிஸ்தோஃப் ஹனோரேவின் மற்ற படங்களைப் போலவே ’மா மேர்-உம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறது.
தன் பாட்டி வீட்டில் தங்கி ஒரு மத ரீதியான பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பியர், அவனுடைய பதினேழாவது வயதில் பெற்றோரின் வீட்டுக்கு வருகிறான். தந்தையால் தாய் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்று நினைக்கும் பியருக்கு, தந்தையின் திடீர் மரணத்துக்குப் பிறகு தன் தாய் பற்றிய உண்மைகள் அவள் மூலமாகவே தெரிய வருகின்றன. 43 வயதான ஹெலன் ஒரு பயங்கரமான குடிகாரி, விபச்சாரி. விபச்சாரி என்றால் மாப்பாஸான் கதைகளில் வருவது போன்ற ஏழ்மையின் காரணமாக அத்தொழிலில் தள்ளப்பட்டவள் அல்ல. ஹெலன் ஒரு libertine. லிபர்ட்டைன் என்பவர் சமூக ஒழுக்கம் பற்றிய எந்தக் குற்றவுணர்ச்சியோ கவலையோ, அக்கறையோ இல்லாமல் பாலியல் ரீதியான debauchary செயல்களில் ஈடுபடுபவர். (டிபாச்சரி = மது, போதை மாத்திரை, கட்டுப்பாடற்ற செக்ஸில் ஈடுபடுதல்)
கணவனின் மரணத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஹெலன் தன் மகன் பியரைத் தன்னுடைய உலகத்துக்குள் இழுக்கிறாள்.
“என்னோடு பீச்சுக்கு வருகிறாயா? என்ன, நான் உன்னுடைய காதலி போல் தெரிய மாட்டேனா? வயதானவள் போலவா இருக்கிறேன்? என் காதலனே!”
“உனக்குப் பைத்தியம் தான் பிடித்து விட்டது அம்மா!”
ஆனாலும் பியரின் மனதில் ஹெலன் விதைத்த காமத்தின் விதைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன. மிகுந்த தெய்வ பயமும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட அவன் தன் புத்தகத்தின் அட்டையைக் கிழித்து சிலுவை போல் செய்து அதன் எதிரே மண்டியிட்டு என்னைப் பாவம் செய்யத் தூண்டாதே என்று சொல்லிச் சொல்லி அழுகிறான்.
ஒருநாள் ஹெலன் பியரிடம் சொல்கிறாள்:
“பியர், நீ சின்னப் பையன். உன்னிடம் நான் இதைச் சொல்லக் கூடாது. இருந்தாலும் வேறு வழியில்லை. என் மீது உனக்கு எந்த மரியாதையும் இருக்க வேண்டியதில்லை. உன் தந்தையை விட நான் மோசமானவள். இவ்வளவு காலமாக மாலை நேரங்களில் நான் எங்கே போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் ஒரு தெரு நாய், விபச்சாரி, அதனால்தான் உன்னை உன் பாட்டியிடம் கொண்டு போய் விட்டேன். யாரும் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. உன் தந்தைக்கும் நான் என்ன செய்கிறேன் என்று தெரியும். அவரும் அதற்கு அனுமதி கொடுத்து விட்டார். உண்மையிலேயே நீ என்னை நேசிப்பதாக இருந்தால் நான் அருவருப்பானவள் என்று உனக்குத் தோன்றுவதையும் உனக்குள் ஏற்படும் அவமான உணர்ச்சியையும் ஒப்புக்கொள். அதற்காகவே நீ என்னை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
ஒருநாள் பியர் தன் தந்தையின் அறையைப் பார்க்கிறான். அறை முழுவதும் போர்னோ நூல்கள். அவற்றைப் பார்த்து, தன் காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் அவன் சுய மைதுனம் செய்து கொள்ளும் காட்சி பார்வையாளர்களை உலுக்கி விடக் கூடியதாக இருக்கிறது. கடைசியில் அப்புத்தகங்களின் மீது சிறுநீர் அடிக்கிறான் பியர். பிறகு குற்ற உணர்ச்சியால் கதறி அழுகிறான்.
ஹெலன் பியரைத் தன் தோழி ரேயாவுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்கள் இருவரையும் உறவு கொள்ளச் சொல்கிறாள். ரேயாவை முத்தமிடும் பியர் “எனக்கும் முத்தம் கொடு” என்கிறான். அதற்கு ரேயா, ”நான் கால்ஃப் பிரியை. எனக்குக் குழிகளில் முத்தமிடுவதுதான் பிடிக்கும்.” என்கிறாள்.
பிறகு மூவரும் ஒரு லிபர்ட்டைன் மதுபான விடுதிக்குச் செல்கிறார்கள். பலர் அங்கே நிர்வாணமாக அலைகிறார்கள். பிறகு மூவரும் ஒரு ஷாப்பிங் மாலுக்குப் போகிறார்கள். ஹெலன் அவர்கள் இருவரையும் அந்த இடத்திலேயே உறவு கொள்ளும்படித் தூண்டுகிறாள்…
கட்டுரையாளர் குறிப்பு: [சாரு நிவேதிதா](https://www.facebook.com/charu.nivedita.9)
புகைப்படம்:[பிரபு காளிதாஸ்](https://www.facebook.com/prabhu.kalidas)
தமிழைவிட மலையாள இலக்கிய உலகில் பிரசித்தமான சாரு நிவேதிதா, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆங்கில இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கிறார். தமிழ்க் கலாசாரத்தை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்யவேண்டியது இப்போதைய அவசரமான தேவை என்று கருதும் சாரு, ஏஷியன் ஏஜ் ஆங்கில தினசரியில் மூன்று ஆண்டுகள் எழுதிய பின்னர் இப்போது, லண்டனிலிருந்து வெளிவரும் Art Review Asia என்ற பத்திரிகையில் Notes From Madras என்ற தொடரை எழுதி வருகிறார். தமிழில் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களும் பல கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார்.
�,”