Yநசுக்கப்படும் ஏற்றுமதியாளர்கள்!

Published On:

| By Balaji

ஏற்கெனவே ஏற்றுமதியாளர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையின் மதிப்பு 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்ந்து நீடித்து வருவது ஏற்றுமதியாளர்களுக்குத் தொல்லைகளை உருவாக்குகிறது. ஜிஎஸ்டி தொழில்நுட்ப அமைப்பு அடிக்கடி செயலிழப்பதாலும், வேகம் குறைவதாலும், நாம் கொடுக்கும் கோரிக்கைகளையும், கட்டளைகளையும் ஏற்றுக் கொள்ளப் பிடிவாதமாக மறுப்பதாலும் பொது வரி செலுத்துவோர் மட்டுமல்லாமல், கார்ப்பரேட் வரி செலுத்துவோருக்கும் கூட ரிட்டன்களைத் தாக்கல் செய்வதில் தாமதமும் இடையூறும் ஏற்படுகிறது.

இதுபற்றி இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவரான கணேஷ் குமார் குப்தா டி.என்.ஏ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ரீபண்ட் தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதால் ஏற்றுமதியாளர்கள் ரொக்கத் தட்டுப்பாடு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். ஜிஎஸ்டியின் கீழ் பெருமளவிலான ரீபண்ட் தொகை வழங்கப்படாமல் உள்ளதால், ஏற்றுமதி செய்வதற்குப் பணம் இல்லாமல் எங்களது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தவித்து வருகின்றனர். அதிகாரபூர்வ மதிப்பீட்டின்படி, சுமார் 20,000 கோடி ரூபாய் ரீபண்ட் தொகை இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் நாட்டின் மொத்த ஏற்றுமதியும் பாதிக்கப்படுகிறது.

பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சில ஏற்றுமதி நிறுவனங்கள் அழுகுரலிட்டு வருகின்றன. அவர்களுக்கு ரீபண்ட் தொகை இன்னும் கிடைக்கவில்லை. ஒரு கோடியோ, பத்து கோடியோ இல்லை, ஆயிரம் கோடிகள் மதிப்பிலான ரீபண்ட் தொகை நிலுவையில் உள்ளது. ஒரு நிறுவனத்துக்கு இன்னும் 80 கோடி ரூபாய் ரீபண்ட் தொகை வழங்கப்பட வேண்டும். பணம் இல்லாமல் அந்நிறுவனம் தத்தளித்து வருகிறது. தினசரி செயல்பாடுகளுக்கும் அவர்களிடம் பணம் இல்லை. வங்கிகளும் கடன் வழங்குவதை நிறுத்திவிட்டன. இந்தப் பிரச்சினை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இம்மாநிலங்களைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு உள்ளீட்டு வரிக் கடன் ரீபண்ட் தொகை கூடச் செலுத்தப்படுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share